அகத்திணையியல் - நூற்பா-1,2                             95


 

     பொருள் என்பது ஆகுபெயராய்ப் பொருள் இலக்கணத்தை
 உணர்த்துதல், நாள்மீனின்பெயர் நாளிற்குப் பெயர் ஆயினாற்போல்வதோர்
 ஆகுபெயராம் என்பர் நச்சினார்க்கினியர் [தொல்.பொ. 1 ந.]

     உலகு இளைப்பு ஒழிக்கும் இறைவன், பொருளிலக்கணம் உணராது
 இருக்கும் இளைப்பைப்போக்கி அறிவு வளர உதவுவான் என்பதாம்.

பொருள் வகை

 374. போக்குஅறு மரபின் பொருள்எனப் படுவது
      நோக்குஅரும் வீடு நுவற்சிசெல் லாமையின்
      அறம்பொருள் இன்பம் ஆகும் அதுவே
      அகனும் புறனுமென்று ஆயிரு பாற்றாய்
      வகைபட வந்த அணிநலம் தழீஇச்
      செய்யுள் இடவயின் புல்லிய நெறித்தே.

 இது "மேல் கூறுவல்" என்ற பொருளாவது விரித்துக் கூறும் உலகநடையானும்
 வேதநடையானும் இத்துணைப் பகுதிப்படும் எனவும், அதுவே தொகுத்துக்
 கூறும் தமிழ் நடையான் இத்துணைப் பகுதிப்பட்டு இவ்வாறாக இன்னுழி
 விளங்கும் இயல்பிற்று எனவும் கூறுகின்றது.

     இ-ள்: குற்றமற்ற இயல்பினை உடைய பொருள் என்று சிறப்பித்துச்
 சொல்லப்படுவது, மனத்தான் நோக்குதற்கு எட்டாத வீடு துறவறமாகிய
 காரணவகையால் கூறப்படுவது அல்லது இலக்கண வகையால் கூறுதற்கு
 எட்டாமையின், அதனைவிடுத்து, விரித்துக்கூறும் உலக நடையானும்
 வேதநடையானும், அறமும் பொருளும் இன்பமும் என மூன்று வகைப்படும்.
 அங்ஙனம் விரித்துக் கூறப்படும் பொருளே, தொகுத்துக் கூறும்
 தமிழ்நடையான் அகப்பொருளும் புறப்பொருளும் என இரண்டு வகைத்தாய்,
 குணமும் அலங்காரமும் எனக் கூறுபடவந்த அணியான் உளதாகிய
 சிறப்பினைப் பொருந்தி, செய்யுளிடத்தே சார்ந்து விளங்கும் இயல்பினை
 உடைத்தாம் என்றவாறு.