96                            இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     அறமாவது, மனுமுதலிய நூல்களின் விதித்தனசெய்தலும் விலக்கியன
 ஒழிதலுமாம். அஃது ஒழுக்கம் வழக்குத்தண்டம் என மூன்று வகைப்படும்.
 அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு
 விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்று அவற்றிற்கு ஓதிய
 அறங்களின் வழுவாது ஒழுகுதல். வழக்காவது, ஒருபொருளைத் தனித்தனியே
 எனது எனது என்று இருப்பார் அது காரணமாகத் தம்முள் மாறுபட்டு
 அப்பொருள்மேல் செல்வது. அது கடன்கோடல் முதலிய பதினெட்டுப்
 பதத்தாம். தண்டமாவது, அவ் வொழுக்கநெறியினும் வழக்குநெறியினும்
 வழீஇயினோரை அந்நெறி நிறுத்தற்பொருட்டு ஒப்ப நாடி அதற்குத்தக
 ஒறுத்தல்.

     இனி, இல்லறத்தின்வழிப் படுவனவாகிய பொருள் இன்பங்களுள்,
 பொருளாவது அரசநீதி துணைக்காரணமாக ஈட்டப்படுவது. அது மணி
 பொன் நெல் முதலியனவாம். இன்பமாவது பொருள் துணைக் காரணமாக
 ஒரு காலத்து ஒரு பொருளான் ஐம்புலன்களும் நுகர்தற்சிறப்பு உடையதாம்.
 அறம் இம்மைமறுமைவீடு என்னும் மூன்றனையும் பயத்தலானும், பொருள்
 இம்மைமறுமை என்னும் இரண்டனையும் பயத்தலானும், இன்பம்
 இம்மைஒன்றனையே பயத்தலானும் இம்முறைவைத்தார்.

     'சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்
     அறத்துவழிப் படூஉம் தோற்றம் போல'                புறநா. 31

 என்றார் பிறரும் எனக்கொள்க.

     அகம் முதலாயினவற்றின் விகற்பம் எல்லாம் மேலே கூறுப ஆகலின்,
 அவை ஆங்காங்கு உணர்க.                                     (2)

விளக்கம்

     உலகநடையானும் வேதநடையானும் உறுதிப்பொருள் மூன்று
 வகைப்படுதல் தமிழ்நூலாருக்கும் உடன் பாடாதல்,