இது, மேல் அகம் எனப்பட்ட பொருட்கு வகையும் பெயரும்
கூறுகின்றது.
இ-ள் மேல் அகப்பொருள் எனக் கூறிப்போந்த அகத்திணைதான்,
கைக்கிளைத்திணையும் ஐந்திணையும் ஒழிந்த பெருந்திணையும் என ஏழ்
இயல்பினை உடைத்தாம் எ-று.
கைக்குடை கையேடு கைவாய்க்கால் எனப் பெருமை யில்லாதனவற்றை
வழங்குப ஆதலின், கை என்பது சிறுமை பற்றி வருவதோர் இடைச்சொல்
என்றும், கிளை என்பது உறவு என்றும் பொருள்கொண்டு, கைக்கிளை
என்பதற்குப் பெருமை இல்லாத தலைமக்கள கிளைமை என்று பொருள்
கூறுவாரும் உளர். அற்றன்று; மேல் "கைக்கிளை ஒருதலைக்காமம்"
என்பதற்கு இயைய, அதற்கு யாம் ஒருமருங்கு பற்றிய கேண்மை என்றே
பொருள் கூறுதும், ஐந்திணை ஐந்து திறத்தனவாகிய ஒழுக்கம். அவையாமாறு
மேற்கூறுப.