நியமவுவமை
அறிவுறின் அதனுக்கு இதுவே ஒப்புஎன நெறியுறப் புணர்க்கும் நியம உவமை வருமாறு :
"தாதுஒன்று தாமரையே நின்முகம் ஒப்பது; மற்று
யாதுஒன்றும் ஒவ்வாது; இளங்கொடியே! - மீதுஉயர்த்த
சேலே பணியப் புலிஉயர்த்த செம்பியர்கோன்
வேலே விழிக்கு நிகர்"
என வரும்.
[ஒரு பொருளுக்கு மற்று ஒரே பொருளே உவமையாதற்கு ஏற்புடையது என்று வரையறுத்துக் கூறுவது நியமஉவமை. மகரந்தம் பொருந்திய தாமரையேயன்றி, மற்று எதுவும் நின் முகத்துக்கு ஒப்பாகாது. பாண்டியனைப் பணிவித்துப் புலிக் கொடியை உயர்த்திய சோழனுடைய வேலே நின் விழிகளுக்கு நிகர்-என்ற இப்பாடலில், முகத்திற்குத் தாமரையும், விழிகளுக்கு வேலுமே உவமையாகத் தக்கன என்று வரையறை செய்துள்ளமை காண்க.
"வேறுஉரைப் பதுபிழை உவமை இதுவெனத்
தேறிய பொதுவுடைத் திறத்தது நியமம்." - வீர.உரை. 156
"நியமமாம் பிரிநிலை ஏகாரம் வந்தே
இயல்நிகர் ஒன்றுரைத்து ஏனைய நீக்கலே". - தொ. வி. 334
"இதற்குஇஃதே உவமம் என்பது நியமம்" - மு. வீ. பொ. 11]
அநியமவுவமை
இதுவே அன்றி இதனுக்கு இது போன்று அதுவும் ஆம்எனும் அநியம உவமை வருமாறு :
"கவ்வை விரிதிரைநீர்க் காவிரிசூழ் நன்னாட்டு,
மௌவல் கமழும் குழல்மடவாய்! - செவ்வி
மதுவார் கவிரேநின் வாய்போல்வது; அன்றி,
அதுபோல்வது உண்டேனும் ஆம்"
|
|
|