இருக்கும் ஒளி பொருந்திய முகமா? இப்பொருள் உண்மையில் யாது என்று வரையறுக்க இயலாது என்மனம் இரு கூறுபட்டுத் தடுமாற்றமுற்று ஒரு பக்கமும் சாராது உள்ளது - என்ற இப்பாடலில், தாமரையோ முகமோ என்னும் ஐயநிலை தெளியாமை கூறப்பட்டுள்ளது.
இதனை ஐயவணி என்ற தனி அணியாகச் சந்திராலோகம் குறிப்பிடும். வடநூலார் சந்தேகாலங்காரம் என்பர்.
"பொய்யறு பொருளையும் பொருவையும் கருதி
ஐயப் படுவது ஐய உவமை". - வீர. உரை. 156
"ஐயம் கொண்டன இருபொருள் அறைதல்
ஐய உவமை ஆகும் என்ப" - தொ. வி. 335
"ஐயுற்று இருமையும் அறைகுவது ஐய
உவமை என்மனார் உணர்ந்திசி னோரே". - மு. வீ. பொ. 13
தேற்றவுவமை
இவ்வியல் அதனால் இதுஅன்று இதுஎனச் செவ்விதின் தெளிந்த தேற்ற உவமை வருமாறு :
"தாமரை நாள்மலரும் தண்மதியால் வீறுஅழியும்;
காமர் மதியும் கறைவிரவும்; - ஆம்இதனால்,
பொன்னை மயக்கும் பொறிசுணங்கி னாள்முகமே,
என்னை மயக்கும் இது"
என வரும்.
[இதுவோ அதுவோ என்ற தடுமாற்றம் நீங்கி இன்ன காரணத்தால் இதுவன்று இதுவே என்று முடிவு செய்வதனைக் கூறுவது தேற்ற உவமை.
தாமரை மலர் மதியைக் கண்டு கூம்பும் ஆதலானும், அழகிய மதியம் களங்கம் உடைத்து ஆதலானும், மதிக்கும் தோலாது
|
|
|