இஃது இசை உவமை எனவும் பெயர் பெறும்.
"பொருத்த மின்மைப் பொருவையும் பொருளையும்
இருத்தி இசைவது இசையுவமை யாகும்". - வீ. உரை 156
"இன்சொல் உவமையாம் இணைஇவை என்ற
பின்சொல் லியபொருள் பெற்றியின் உரைத்தலே". - தொ. வி. 336]
விபரீதவுவமை
ஊறுஇல் உவமேயம் உவமையாய் உலகியல் வேறுபடமாட்டிய விபரீத உவமை வருமாறு :
"திருமுகம் போல்மலரும் செய்ய கமலம்;
கருநெடுங்கண் போலும் கயல்கள்; - வல்லி
இயல்போலும் மஞ்ஞை; - இடைபோலும் கொம்பர்;
மயல்போலும் யாம்போம் வழி"
என வரும்.
[உலகறிந்த உபமானத்தை உபமேயமாகவும், உபமேயத்தை உபமானமாகவும் குறிப்பிடுவது விபரீத உவமையாம். தாமரை, கயல், மயில், கொடி என்பன உபமானப் பொருள்கள். முகம், கண், இயல், இடை என்பன உபமேயப் பொருள்கள். அங்ஙன மாகவும் அவற்றின் நிலையை மாற்றித் "தலைவியின் முகம் போலத் தாமரை மலரும்; கயல் மீன்கள் அவளுடைய கரிய நெடிய கண்கள் போலும்; அவள் இயல் போன்ற இயலுடையது மயில்; அவள் இடைபோலத் துவளுவது கொடி; நாம் போம் வழி மயக்கம் தருவது போலும்" - என்ற இப்பாடலில், உபமேயங்கள் உபமானமாகவும் உபமானங்கள் உபமேயமாகவும் வந்துள்ளமை காண்க.]
"வருமுலை அன்ன வண்முகை உடைந்து
திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை", - சிறுபாண். 72, 73
எனவும் வரும். இங்ஙனம் வேறுபடக் கூறினும் வழு ஆகாது; என்னை? |
|
|