122

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

    "இதுபொருள் அதுபொருள் என்றுணர்ந் திலம்என
     உவமையின் மலைவினை உரைப்பது மயக்கே".          - வீர. உரை. 157 

    "விழுமிய ஒருபொருள் மேல்எழும் வேட்கை
     வருமென மயக்கம் புலப்பட வகுத்து
     மொழிவது மோக உவமை யாகும்".                   - மு. வீ. பொ. 19] 

அபூதவுவமை

      அவனியில் இல்லா அன்னது ஓர் பொருளை உவமை செய்து உரைக்கும் ஆபூத
 உவமை வருமாறு :

    "எல்லாக் கமலத்து எழிலும் திரண்டுஒன்றின்,
     வில்ஏர் புருவத்து வேல்நெடுங்கண் - நல்லார்
     முகம்போலும் என்ன, முறுவலித்தார் வாழும்
     அகம்போலும் எங்கள் அகம்"

 என வரும். விகார உவமையோடு இதனிடை வேற்றுமை என்னை எனின், அது
 பிறரால்  விகாரப்பட்டதாகக் கோடல்; இஃது அன்னது அன்று என்க.

     [உலகில் இல்லாததொரு பொருளை உவமையாகக் காட்டுவது அபூத
  உவமையாகிய இல்பொருள் உவமையாம்.

     தலைவி என் உள்ளத்தையே இருப்பிடமாகக் கொண்டு தங்கியுள்ளாள். அவள்
 வில் போன்ற புருவங்களும் வேல் போன்ற விழிகளும் உடையாள். உலகிலுள்ள
 எல்லாத் தாமரைகளின் அழகும் ஒருசேரத் தொகுக்கப்பட்டால் அத்தொகுப்பாகிய
 அழகு அவள் முகத்தழகை நிகர்க்கும் - என்ற இப்பாடலில், உலகில் உள்ள எல்லாத்
 தாமரைகளின் அழகின் திரட்சியும் ஒன்று சேர்த்துக் காண்டல் இயலாமையின்
 அத்திரட்சி முகத்திற்கு உவமையாக்கப்படுதல் அபூத உவமையாகும்.

    "விடாதஅப் பொருட்கு விதிசேர் உவமை
     அடாதது இயம்புவது அபூத உவமை"                   - வீர. உரை. 157