"நிழல்கோபம் மல்க நிறைமலர்ப்பூங் காயாச்
சுழற்கலவம் மேல்விரித்த தோகை, - தழல்குலவும்
தீம்புகை ஊட்டும் செறிகுழலார் போலும்கார்;
யாம்பிரிந்தார்க்கு என்னாம் இனி?"
என வரும்.
[உபமானம்தோறும் உவமை உருபு புணர்த்தலைவிடுத்து ஒரே இடத்து உவமை உருபை அமைத்து அதனை உவமைதோறும் கொள்ளவைப்பது ஒருவயிற் போலியாம்.
நிழலில் பரவிய இந்திரகோபப் பூச்சிகள் தழல்போலும். பூக்கள் நிறைந்த காயா தீம்புகை போலும், அதன்மேல் அமர்ந்த கலவம் விரித்த மயில் குழலுக்குப் புகையூட்டும் மகளிர் போலும். இக் கார்காலத்தில் எம்மால் பிரியப்பட்ட தலைவி நிலை யாதாகுமோ? - என்று வினைவயிற் பிரிந்தோன் வேற்று நாட்டகவயின் தான் மீண்டும் வருவதாகக் குறித்துப் புறப்பட்ட காலம் வந்தமையின் தலைவியை நினைத்த எண்ணம் பற்றிய இப்பாடலில், தோகை செறிகுழலார் போலும் என்று ஒரே இடத்தில அமைக்கப்பட்ட உவமை உருபைக் கோபம் தழல் போலும், காயா புகைபோலும் என ஏனை இடத்தும் கொள்ள வைத்தமை காண்க.]
கூடாவுவமை
கூடாததனைக் கூடுவதுஆக்கிக் கோடாது உவமைசெய் கூடா உவமை வருமாறு :
"சந்தனத்தின் செந்தழலும், தண்மதியில் வெவ்விடமும்
வந்தனவே போலும் மறுமாற்றம்; - பைந்தொடியீர்!
வாவிக் கமல மலர்முகம்கண்டு ஏக்கறுவார்
ஆவிக்கு இவையோ அரண்?"
|
|
|