அணியியல் - உவமையணி்

127 

     பகை மன்னர் செல்வங்கள் சோழ மன்னரிடம், பொதிய மலையிலுள்ள
 அகத்தியனைப் போன்றும், அவனால் உண்ணப்பட்ட கடலைப்போன்றும், அதனுள்
 உண்டாகிய நில உலகம் போன்றும் நீங்காது நிற்கும் என்ற கருத்துடைய இப்பாடலில்
 - அகத்தியன், அவனால் உண்ணப்பட்ட கடல், அக்கடலிலிருந்து உண்டாகிய உலகம்
 என மூன்று உவமைகள் ஒன்றற்கு ஒன்று தொடர்பு உடையனவாய் அமைந்திருப்பது
 காண்க.

    "மாலை உவமையாம் மருவிய பலநிகர்
     மாலையாக் கோத்தபின் வனைபொருள் இயம்பலே"       - தொ. வி. 338] 

     அற்புதம் முதலிய அலங்காரங்கள் எட்டோடும் உவமை அலங்காரம் கூடிவருதல்
 பற்றி அவற்றை வேறு பிரித்து ஓதினார். அவ்வற்புதம் முதலியவற்றிற்கு இலக்கணம்
 மேல் கூறப்படும். அவற்றுள் அற்புத உவமை வருமாறு :

    "குழைஅருகு தாழக் குனிபுருவம் தாங்கி
     உழையர் உயிர்பருகி நீண்ட - விழிஉடைத்தாய்,
     வண்டுஏறு இருள்அளகம் சூழ வருமதிஒன்று
     உண்டேல், இவள்முகத்துக்கு ஒப்பு"

 என வரும்.

     [உலகில் காணப்படும் பொருட்கு இல்லாத பல பெற்றிகளை இணைத்து வியப்புத்
 தோன்ற உவமிப்பது அற்புத உவமை.

     இரண்டருகும் காதணிகள் தாழ வளைந்த புருவத்தைக் கொண்டு பக்கலிருள்ளார
  உயிரைப் பருகி நீண்ட விழிகளை உடையதாய் வண்டுகள் தங்கும் இருண்ட மயிர்
 முடி சூழ்ந்திருப்ப வருவதொரு மதி இருக்குமாயின் அஃது இவள் முகத்துக்கு ஒப்பாம்
 - என்ற இப்பாடலின் உலகில் காணப்படும் மதிக்கு இல்லாத பல பெற்றிகளை உடைய
 மதி ஒன்றனைக் கற்பித்து முகத்துக்கு உவமை கூறியமை காண்க.