"இயைபுஇயை பின்மை ஏக தேசம்
ஒருபொருள் பலபொருள் உருவகம் சிறப்பே
விருத்தம் அவிருத்தம் நட்பு வியனிலே
ஏக அங்கம் அநேக அங்கம்
அவயவம் அவயவி முற்றுஎன வாய்ந்த
நவையறு சிறப்பின் நானான்கு அதன்விரியே".
- மா. அ. 120
"உரைபெறு சிலேடைவேற் றுமையுடன் ஏது
அபநுதி உவமையென்று அவற்றொடும் விரவும்"
- மா. 121
தொகையுருவகம்
மாட்டேற்று உரை தொகூஉம் தொகை உருவகம் வருமாறு:
"அங்கை மலரும், அடித்தளிரும், கண்வண்டும்,
கொங்கை முகிழும், குழற்காரும், - தங்கியதுஓர்
மாதர்க் கொடிஉளதால்; நண்பா! அதற்குஎழுந்த
காதற்கு உளதோ கரை"
என வரும்.
[உபமேயமும் உபமானமும் ஒன்று என்று மாட்டெறியும் சொல் "ஆகிய" என்பது. அச்சொல் மறைய உபமேயமும் உபமானமும் இணைந்து இருபெயரொட்டாக அமைவது தொகை உருவகமாம்.
"நண்பா! கையாகிய மலரும் அடித்தளிரும் கண்களாகிய வண்டும் கொங்கையாகிய மொட்டும் கூந்தலாகிய மேகமும் பொருந்திய விருப்பம்தரும் கொடி ஒன்றனிடத்து எனக்கு ஏற்பட்ட காதல் கரைகடந்தது" - என்று தலைவன் தன்நிலையைப் பாங்கனிடம் சாற்றியதாக அமையும் இப்பாடலில், கை மலர், அடித்தளிர், கண்வண்டு, கொங்கை முகிழ் குழற்கார் என்பன உருவக உருபு இடை வரப்பெறாமையால் தொகை உருவகங்களாம். |
|
|