164

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

சிறப்புருவகம்

     ஓர்ந்து அடை உருபில் துற்றதை அவற்றால் தேர்ந்து உருபிக்கும் சிறப்பு
 உருவகம் வருமாறு :

    "விரிகல்சூழ் மேதினி நான்முகன்மீ கானாச்,
     சுரநதிபாய், உச்சி தொடுத்த - அரிதிருத்தாள்
     கூம்பாக, எப்பொருளும் கொண்டு, பெருநாவாய்
     ஆம்பொலிவிற்று ஆயினதால்; அன்று"

 என வரும்.

     [ஒரு பொருளுக்குச் சிறந்த அடைகளைக் கொடுத்து அவ்வடைகளை
 உருவகம்செய்து அவற்றால் பொருளுக்குச் சிறப்புத்தந்து பொருளையும் உருவகிப்பது
 சிறப்பு உருவகமாம்.

     பிரமனை மீகாமனாவும், ஆகாய கங்கையைப் பாயாகவும், திருமால் பெருநிலம்
 கடந்த திருவடியைக் கூம்பாகவும் கொண்ட உலகம் எல்லாப் பொருளையும்
 தன்னகத்துக்கொண்ட நாவாயாகியது - என்ற இப்பாடலில், பூமிக்கு அடையாகிய
 நான்முகன், சுரநதி, அரிதிருத்தாள் என்பனவற்றை மீகாமன், பாய், கூம்பு என்று
 உருவகம் செய்து அங்ஙனம் உருவகம் செய்ததற்கு ஏற்பப் பூமியை நாவாயாய்
 உருவகம் செய்தது காண்க.

     இது சகல உருவகம் எனவும் பெயர் பெறும்.

    "ஒருபொருட்டு ஏற உருவகம் பலமொழி
     தருமெனின் உருவகம் சகல மாகும்"                    - வீ .உரை. 160]

விரூபகம்

     உருவகம் செய்து அதற்கு உறாமரபு இவைஎன விரியக் காட்டும் விரூபகம்
 வருமாறு:

    "தண்மதிக்குத் தோலாது, தாழ்தடத்துள் வைகாது,
     முள்மருவும் தாள்மேலை முதிழாது, - நண்ணி,
     இருபொழுதும் செவ்வி இயல்பாய் மலரும்,
     அரிவை வதனாம் புயம்"

 என வரும்.