அணியியல் - உவமையும் உருவகமும்

177 

மேலனவற்றிற்கு ஒரு புறனடை

 645. உருவகம் உவமை எனஇரு திறத்தவும்
      நிரம்ப உணர்த்தும் வரம்புதமக்கு இன்மையின்,
      கூறிய நெறியின் வேறுபட வருபவை
      தேறினர் கோடல் தெள்ளியோர் கடனே.

 இது மேனவற்றிற்கு ஒருபுறனடை கூறுகின்றது.

     இ-ள் :  உருவகமும் உவமையும் என்னும் இரண்டு திறத்து அலங்காரமும்
 ஒழிவுஇன்றி உணர்த்தும் வரையறை தமக்கு இன்மையால், சொல்லப்பட்ட நெறியின
 வேறுபட வருவனவற்றை அறிந்து அவற்றின்பால் சார்த்திக்கோடல் அறிவுடையோரது
 கடன் என்றவாறு.

     ஈண்டு உருவகம் முற்கூறியது அதிகாரத்தால் எனக் கொள்க.

     [உருவகம் உவமையின் கூறாகவே பண்டையோரால் கொள்ளப்பட்டது.
 "குருகுலமாம் ஆழ்கடல்" (சீவக. 290) என்பதனைக் குறிப்பு உவமம் என்றே
 நச்சினார்க்கினியர் குறிப்பிட்டுள்ளார்.

     தொல்காப்பியனார் குறிப்பிடாத உவமைவிரி, உருவக விரிகளை இவ்வாசிரியர்
 குறிப்பிட்டுள்ளார். குறப்பிட்டவற்றைக் கடந்தும் இவ்வணிகள் வருகின்றன.
 இவ்வணிகளின் விரிகளாக வீரசோழியம் முதலியவற்றில் பிறவும் கூறப்பட்டுள்ளன.
 இவ்விரிகளில் சிலவே வேறு அணிகளாகவும் கூறப்பட்டுள்ளன. எனவே, உருவகமும்
 வரையறைக்கு அப்பாற்பட்டன-வாதலைக் குறிப்பிட இப்புறனடை நூற்பா
 யாக்கப்பட்டுள்ளது.

ஒத்த நூற்பாக்கள்

முழுவதும் - தண்டி 39

      23-24