ஆனால் சந்திரனைப் போன்ற சங்கம், சங்கினைப் போன்ற வெண்டாழைஇதழ் என நிறம் ஒன்று பற்றியே முதலில் உபமேயமாகக் கூறப்பட்ட சங்கினையே பின்னர் உபமானமாகக் கூறுதற்கண் சிறப்பின்மையின், அங்ஙனம் கூறுதல் ஏற்புடைத்து அன்று என்பது.]
உருவகமும் உவமையும் ஓர் இனம் ஆக்கிப் புறனடைப் படுத்தமையான், உருவகத்திற்கு ஓதிய இலக்கணம் உவமையும் உவமைக்கு ஓதிய இலக்கணம் உருவகமும் பெறுதலும் கொள்க.
"மன்றல் குழலார் உயிர்மேல், மதன்கடவும்
தென்றல் கரிதடுக்கும் திண்கணையம்; - மன்றலரைக்
கங்குல் கடலில் கரையேற்றும் நீள்புணையாம்;
பொங்குநீர் நாடன் புயம்"
என்பது உவமைபோல அற்புதம் அடுத்துவந்த உருவகம். பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.
[சோழமன்னன் புயங்கள், அவன் உரிமைமகளிர் உயிர்மேல் மன்மதன் செலுத்தும் தென்றலாகிய யானையை, எதிர்க்கவாராது தடுக்கும் கணையமரமாம்; இரவாகிய கடலிலிருந்து பகலாகிய கரைக்கண் ஏற்றுவிக்கும் நீண்ட தெப்பமாம் - என்னும் இப்பாடலில், வியப்பொடு சிவணி வரும் தென்றல் கரி, புயக்கணையம், புயப்புணை என்ற உருவகங்கள் அற்புத உருவகங்களாக அமைந்தமை காண்க.]
இனி, பண்புபற்றி உவமிக்குங்கால்,
"கலவ மாமயில் எருத்தின் கடிமலர் அவிழ்ந்தன காயா;
உலக மன்னவன் திருநாள் ஓளிமுடி பணிந்துநின்றவர்போல்,
பலவும் பூத்தன கோங்கும்; பைந்துகில் முடியணிந் தவர்பின்
உலவு கஞ்சுகி யவர்போல், பூத்தன மரவம்அங்கு ஓருங்கே" - சிந்தா. 1558 |
|
|