[நாள்தோறும் பொழுது கழிதலைத் தம் வாழ்நாளின்மேல் தங்குதலாக வைத்து வாழ்நாள் கழிதலை உணராதவர்கள், நாள்தோறும் பொழுது கழிதல் நிகழ்வதனைக் கண்டும், அதன் உட்கருத்தை உணராமல், பொழுது கழிதலைப் பொழுது போவதாகவே கொண்டு மகிழ்ச்சியுறுவர்.
இப்பாடலில், வைகலும் என்ற சொல் நாள்தோறும் என்ற பொருளிலேயே மூன்று இடங்களில் வந்துள்ளமை சொல்பொருள் பின்வருநிலை அணியாம்; ஒரே சொல் ஒரே பொருளில் பல இடத்தும் வந்துள்ளமையான் என்க.]
இன்னும் இவ்விலேசானே, பிற அலங்காரங்களோடு கூடிவருதலும் கொள்க.
"செங்கமலம் நாட்டம், செழுந்தா மரைவதனம்,
பங்கயம் செவ்வாய், பதுமம்போல் - செங்கரங்கள்,
அம்போ ருகம்தாள், அரவிந்தம், மாரனார்
யூம்போர் உகந்தாள் தனம்."
இஃது உபமானப் பொருட்பின் வருநிலை ஏனையவற்றோடு வருவன வந்துழிக் காண்க. (29)
[மன்மதனுடைய பூசலை விரும்பி ஏற்றவளாகிய இத் தலைவியின் கண்கள,் முகம், வதய், கைகள், கால்கள், தனங்கள் யாவும் தாமரையை ஒப்பன - என்ற இப்பாடலில், தலைவியின் உறுப்புக்கறுக்கு உபமானமாகக் கூறப்படும் தாமரை என்பதன் பல பரியாயச் சொற்களாகிய கமலம், பங்கயம், பதுமம், அம்போருகம், அரவிந்தம் என்பனவே பல இடங்களிலும் வந்துள்ளமை காண்க. (பொருட்பின்வருநிலை)
"பொன்அசலம் வண்கோ புரம்ஆ டகசயிலம்
மன்னு சிகரம் வடபொருப்பாம் - நன்னர்
உரங்கொள் மதில்மே துஅதுஆகும் மாயோன்
அரங்க மணிமா ளிகை"
என்ற பாடலில், மலையின் பல பரியாயப் பெயர்களாகிய அசலம், சயிலம், பொருப்பு, மேரு என்ற சொற்கள் வந்துள்ளமையும் உபமானப்பொருட் பின்வருநிலை அணியாதல் காண்க. மாறன்.159.] 29 |
|
|