"தன்மேம் பாட்டுரை தான்தற் புகழ்தலே." - தொ. வி. 349
"தன்னைப் புகழ்வது தன்மேம் பாட்டுரை." - மு. வீ. பொ. 90]
வரலாறு :
"எஞ்சினார் இல்லை எனக்குஎதிரா ; இன்உயிர்கொண்டு அஞ்சினார் அஞ்சாது போய்அகல்க ; -- வெஞ்சமத்துப் பேரர அவர்ஆகத்து அன்றிப் பிறர்முதுகில் சாரா;என் கையில் சரம்"
என வரும். (47)
[வீரன் போர்க்களத்தில் விளம்பிய வீரவுரை இது. "எனக்கு எதிராகப் போரிடவந்து உயிர் பிழைத்து மீண்டவர் ஒருவரும் இல்லை. என்னை நேராக எதிர்க்க அஞ்சுபவர் தம் அரிய உயிரைப் பாதுகாத்துக்கொண்டு புறமுதுகிட்டுச் செல்க. கொடிய போரிலே இடம் பெயராது எதிர்ப்பவர் மார்பில் அன்றிப் புறங்காட்டி ஓடுபவர் முதுகில் எம் அம்புகள் பாயமாட்டா" - என்று வீரன் தன் பெருமையைப் போர் மயக்கத்தான் தானே சொற்றவாறு.