அணியியல் - சிலேடையணி

305 

 அறியாமையும்; வெறி - வாசமும்பித்தும்; கண்ணீர்மை - கள்ளாகிய நீர்மையும்
 கண்ணினது நீர்மையும்; இரங்கல் - இசைத்தலும் புலம்பலும்.

     [வேலை ஏந்திய மன்னனே! நின் செங்கோல் செலுத்தப்படும் நாட்டில்
 வெண்ணீர்மை முத்திற்கே உண்டு; மக்களுக்கு இல்லை. வெறியவாய்க் கண்ணீர்மை
 சோருவன சோலைகளே; வெறி கொண்ட மக்களோ கண்ணீர் மை சோரும்
 மகளிரோ இல்லை. யாழே இரங்குவன; மக்களுள் இரங்குவார் இலர் - என்ற
 இப்பாடலில்,

     வெண்ணீர்மை, வெறி, கண்ணீர்மை, இரங்குதல் என்ற சொற்கள் சிலேடைப்
 பொருளால் ஒவ்வொரு பொருளுக்கே வரையறை செய்யப்பட்டவாறு காண்க.]

     நியமவிலக்குச் சிலேடை வருமாறு :

    "சிறைபயில்வ புட்குலமே; தீம்புனலும் அன்ன;
     இறைவ!நீ காத்தளிக்கும் எல்லை, - முறையின்
     கொடியன, மாளிகையின் குன்றமே அன்றி,
     கடிஅவிழ்பூங் காவும் உள"

 என வரும். சிறை - சிறகும் கரையும் சிறைப்படுத்தலும்; கொடி - பதாகையும்
 வல்லியும் கொடுமையும்.

     [அரசனே ! நீ காத்து அளிக்கும் நாட்டெல்லையில் சிறை படுவன பறவைகள்
 மாத்திரம் அல்ல; யாற்று நீரும் சிறைபடும். உன் கோநகரத்து மாளிகைகளாகிய
 குன்றங்களே கொடியன அல்ல; நறுமணம் கமழும் சோலைகளும் கொடியன என்ற
 இப்பாடலில்,

     சிறைபடுதல், கொடியன என்ற சொற்கள் சிலேடைப் பொருளால்
 ஒவ்வொன்றற்கே உரியவாகாது மற்றவற்றிற்கும் உரியவாயினமை, நியமமாகிய
 வரையறுத்தலை விலக்கிக்காட்டும் நியமவிலக்குச் சிலேடை ஆயினவாறு.]

     39-40