ஒத்த நூற்பாக்கள்
முழுதும் - தண்டி 83
"தேறும் தெரிவில் புகழ்ச்சி ஒன் றைப்பழிக் கப்பிறிது
கூறிப் புகழுதல்." - வீ. 174
"உற்றதோர் பொருளினை மறைத்துறு பழியது
பெற்றிட மற்றொரு பொருள்புகழ் பெற்றி
பொற்புடை மாறு படுபுகழ் நிலையே." - மா. 230
"கவிகரு தியபொருள் கரந்துமற் றதனை
சிந்திப் பதற்குமற் றொன்றனை நினைத்துப்
புகழ்வது மாறு படுபுகழ் நிலையே." - மு. வீ. பொ. 99]
வரலாறு :
"இரவுஅறியா, யாவரையும் பின்செல்லா, நல்ல
தருநிழலும், தண்ணீரும் புல்லும் - ஒருவர்
படைத்தனவும் கொள்ளா,இப் புள்ளிமான் பார்மேல்
துடைத்தனவே அன்றோ துயர்?"
என வரும்.
[இப்புள்ளிமான் ஒருவரிடம் சென்று தனக்கு வேண்டியது ஒன்றனை இரத்தல் அறியாது; யாரிடத்தும் ஒரு பயன் கருதிப் பின்தொடர்ந்து செல்லாது; கிடைத்த தண்ணீரைக் குடித்து மரத்து நிழலில் தங்கும்; ஒருவர் தேடிவைத்த செல்வத்தையும் கொள்ளக்கருதாது.அஃது இவ்வுலகில் துன்பமின்றி வாழவில்லையா? - என்ற இப்பாடலில்,
பிறர் பின் சென்று இரந்து பிறரிடம் ஒன்று பெற்று அவர் நிழலில் தங்கி உயிர்வாழும் இரவலனுடைய புன்மை, மானுடைய வாழ்க்கையைப் பாாராட்டிக் கூறுவதன் வாயிலாகப் புலப்படுத்தப் பட்டவாறு.]
"போதும் தளிரும் புனைந்து, மணம்புணர்ந்து,
சூதப் பணைதழுவித் தோன்றுமால், - மாதே 1
பலமா தவங்கள் பயின்றதோ, பண்டு,இக்
குலமா தவியின் கொடி"
என்றாற்போல்வதூஉம் அது. (57) |
|
|