364

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

    "மறைநுவல் கங்கை தாங்கினார்
     நிறைதவ மங்கை காந்தனார்
     குறையென அண்டர் வேண்டவே
     மறைநுவல் கங்கை தாங்கினார்."

     இது முதலடியும் ஈற்றடியும் மடக்கியது

     [நிறைந்த தவத்தை உடைய பார்வதியின் கணவராகிய சிவபெருமான் வேதங்கள்
 புகழும் கங்கையைச் சடையில் தாங்கினார். தம் இன்றியமையாமை கூறத் தேவர்கள்
 வேண்டவே,. வேதங்களைக் கூறும் பிரமனுடைய தலையைத் தம் கையில் தாங்கினார்.
 (பிரமன் தத்துவ இரகசியங்களைப் பிறருக்கு உரைத்த தவறுடையன் ஆயினான்.)]

     கங்கை, கம் கை - என்று பிரித்துப் பொருள் கொள்க.

     இது முதலடி ஈற்றடியாக மடக்கியது காண்க.]

    "கொல்லியம் பொருநனைக் கூடார் கோநகர்
     இல்எரி மேவுதல் இயம்ப வேண்டுமோ
     வல்லியந் தாமரை வனங்க ளாயின
     வல்லியந் தாமரை வனங்க ளாயின."

     இது கடை இரண்டு அடியும் மடக்கியது.

     [கொல்லிமலைத் தலைவனை நண்பர்களாகக் கூடாத பகைவர்களுடைய
 தலைநகரங்களில் உள்ள வீடுகளில் தீப்பற்றி எரிதலைக் கூறவும் வேண்டுமா? அக
 இதழை உடைய தாமரை பூக்கும் நீர்த்தடங்களாயிருந்தன எல்லாம், புலிகளும் தாவும்
 மான்களும் சஞ்சரிக்கும் காடுகளாயின.

     அல்லி அம் தாமரை, வல்லியம் தாம் மரை-என்று பிரித்துப் பொருள் செய்க.