அணியியல் - சொல்லணி - மடக்கு

381 

    "யாழியல் வாய வியலளவா லாயவொலி
     யேழய லொவ்வாவா வேழையுரை - வாழி
     யுழையே லியலா வயில்விழியை யையோ
     விழையே லொளியா விருள்"

 எனவும் வரும்.

     யாழிலிருந்து தோன்றிய இலக்கணவரையறையுடைய எழுவகை இசை ஒலி
 இப்பெண்ணின் பேச்சினிமையை ஒவ்வா. மானின் விழியும் இவள் கூரிய
 விழிகளை ஒவ்வா. வியக்கத்தக்க இவள் அணிகலன்களின் ஒளியும் இவள் மேனி
 ஒளிக்குமுன் தம் ஒளி மழுங்கி இருள்போலாகும்.

     யாழ் இயல்வாய இயல் அளவால்ஆய ஒலியின் ஏழ்இயல் ஏழை உரை
 ஒவ்வாவால்; உழையேல் அயில் விழியை இயலா; ஐயோ! இழையேல் இருள் ஒளியா
 (வாழி - அசை) - என்று பொருள் செய்க. இது இடையினமே அமையப்
 பாடப்பட்டவாறு.]

    "இடையினம் முழுதுறல் இடையினப் பாட்டே"                   -மா. 278 

    "நுமது புனலி லளியி வரிவை
     யமுத விதழி னிகலு - குமுத
     மருவி நறவு பருக வளரு
     முருவ முடைய துறை"

 என ஒற்றெழுத்து இன்றி வருதலும் கொள்க.

     [அளி! நுமது புனலில் இவ்வரிவை அமுத இதழின் இகலும் குமுதம் மருவி நறவு
 பருக வளரும் உருவம் உடையது உரை.

     வண்டே! நீ பழகும் குளங்களில் இப்பெண்ணின் அமுதம் பொதிந்த இதழ்கள்
 போலத் தோற்றமளிக்கும் குமுத மலர்களில் ஒரு முறை மருவித் தேனைக் குடித்த
 பிறகு மீண்டும் தேன் ஊறும் தன்மை உடைய மலர் உண்டாயின் கூறுவாயாக - என்று
 தலைவன்]