58

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     இ-ள் :    கௌடம் என்று சொல்லப்படுவது மேல் கூறிய பத்துக் குண
 அலங்காரங்களோடும் கூடாது நடக்கும் ஒழுக்கம் உடையது என்றவாறு.

     முற்றும்மையை எச்சம் ஆக்கிச் சிலவற்றோடு கூடியும் இயலும் எனக் கொள்க.

     [பொருளின்பம், ஒழுகிசை, உதாரம், சமாதி என்பன இருநெறியாருக்கும் ஒக்கும்.]

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 15

    "கௌடன் வேண்டும் இவற்றை விபரீதமாக"                   - வீ. 148 

     நெகிழ் இசை இல்லாச் செறிவு வருமாறு :

    "சிலைவிலங்கு நீள்புருவம் சென்றுஒசிய நோக்கி
     முலைவிலங்கிற்று என்று முனிவாள் - மலைவிலங்கு
     தார்மாலை மார்ப! தனிமை பொறுக்குமோ ?
     கார்மாலை கண்கூடும் போது".

 என வரும்.

     [மார்ப! புணர்ச்சிக்கண் முலை விலங்குங்காலும் புருவம் ஒசிய முனிபவளாய்ப்
 பிரிவைச் சிறிதும் ஆற்றாத தலைவி கார் கால மாலைக்கண் நின்னைப் பிரிந்திருக்கும்
 தனிமையைப் பொறுத்தல் இயலுமோ?

     இப் பாடலில் குறில் இணை, குறில் நெடில், நெட்டொற்று என்பன அடுத்து ஓசை
 நெகிழாது செறிந்திருக்கும் பெற்றி காண்க. இதனைச் சமனிலைப்பாற்படுத்து மெல்லினம்
 மிக்குவரத் தொடுப்பதே வைதருப்பச் செறிவு எனவும் வல்லினம் மிக்குவரத்
 தொடுப்பதே கௌடச் செறிவு எனவும், இடையினம் மிக்கு வரத் தொடுப்பதே
 பாஞ்சாலச் செறிவு எனவும் கூறும் மாறன் அலங்காரச் செய்தியும்
 உளங்கொளத்தக்கது.]