இதன் மறுதலைக் கௌடம் வருமாறு :
"பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று" - குறள் 297
என வரும்.
[பொய் சொல்லாதிருத்தலை ஒருவன் தவறாது மேற்கொண்டால் வேறு அறங்கள் செய்யவேண்டுவதில்லை; - வேறு அறங்கள் செய்வது நல்ல பயன் தரும்.
இப்பாடலில் பொய்யாமை என்பது பொய் சொல்லா திருத்தல் தவறாதிருத்தல் என்ற பொருள்களிலும், செய்யாமை என்ற அடுக்கு தெளிவுப்பொருளிலும், இன்மையது அபாவமாகிய செய்தல் என்ற பொருளிலும் வந்துள்ளன.
இங்ஙனம் பொருள் எளிதில் புலனாகாத வகையில் செய்யுள் யாத்தலையே கௌடநெறியார் வேண்டுவர்.]
விரவத்தொடுக்கும் சமநிலை வருமாறு :
"சோகம் எவன்கொல்? இதழிபொன் தூக்கின; சோர்குழலாய் !
மேகம் முழங்க, விரைசூழ் தளவம் கொடிஎடுக்க,
மாகம் நெருங்க,வண் டானம் களிவண்டு பாட,எங்கும்
தோகை நடம்செய, அன்பர்திண் தேர்இனித் தோன்றியதே"
என வரும். விரவுதல் வன்மை மென்மை இடைமை தம்முள் விரவுதல்.
[சோர்குழலாய் ! கார்கால வருகையைக் காட்ட மேகம் முழங்கவும், முல்லைக்கொடி தழைக்கவும், கார்மேகம் நெருங்கவும், வண்டானம் என்ற பறவைகளும் வண்டுகளும் பாடவும், மயில் ஆடவும் தலைவர் நின்னை அடைதல் குறித்துத் தாம் சென்ற இடத்திலிருந்து மீண்டும் வரும் தேர் கட்புலனாகிவிட்டது. அவர் பிரிவு குறித்து வருந்துதல் வேண்டா - என்று தோழி, தலைவன் பிரிவு குறித்துப் பருவவரவின்கண் மனம் வருந்திய தலைவியை ஆற்றுவிக்கும் இப்பாடலில், வன்மை மென்மை இடைமை தம்முள் விரவிவர அமைந்துள்ளமை வைதருப்ப நெறியாருக்கு ஏற்றதாம்].
|
|
|