என வரும். இதனுள் வறுமை தீரக் கொடுப்பன் என்பது குறிப்பு. இவ்வுதாரம்
இருவகைநெறியார்க்கும் ஒக்கும்.
[உறையூரைக் கோநகராகக்கொண்டு ஆளும் வீரனாகிய சோழனுடைய முகத்தைக்
காணும்வாய்ப்புப்பெற்ற பின்னர், இரவலருடைய கண்கள் இவ்வுலகில் வேறு எவரையும்
மிடி தீரப்பொருள் பெறும் விருப்பினால் பாராவாம் - என்ற இப்பாடலில் சோழன்
இரவலரைக் கண்டஅளவில் அவர் குறிப்பறிந்து அவர்தம் வாழ்நாள் இறுதிகாறும்
மிடியின்றி வாழப் பொருள்நல்குவான் என்ற கருத்து குறிப்பாக அமைந்துள்ளமை
காண்க.
இவ்வுதாரம் மூன்று நெறியாருக்கும் ஒக்குமேனும் வைதருப்பத்தில் குறிப்புப்
பொருள்சிறிதளவும், பாஞ்சாலத்தில் அதனின் சிறிது மிகுதியாகவும், கௌடத்தில்
இன்னும் மிகுதியாகவும் காணப்படும் என்பது மாறன் அலங்காரம்.