68

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

 சந்திரன் வளராதிருப்பதற்குக் காரணம் யாது? பார்வதியின் முகத்தழகு கண்டு
 ஆசையால் தாழ்ந்து வளரவில்லையா? அன்றி நிறைமதியமானால் பாம்பு பற்றும்
 என்று கருதி வளரவில்லையா? - என்ற இப்பாடலில் கவி நினைத்த கருத்தை
 வெளிப்படுத்தற்குரிய சொற்கள குறைவற அமைந்துள்ளன.

     இவ்வுய்த்தலில் பொருண்மை இரு நெறியாருக்கும் ஒக்கும் என்பது
 தண்டியலங்காரம், மாறன் அலங்காரம் என்பனவற்றின் கருத்தாகும். கற்பனைச்
 சுவையைப் பெரிதும் விரும்பும் கௌடநெறியார் இவ்வாறு தெள்ளிதின் உரைத்தலை
 வேண்டார் என்ற கருத்துடையவர் இந்நூலாசியர்.]

     இதன் மறுதலைக் கௌடம் வருமாறு :

    "ஒல்லேம் குவளைப் புலால்; மகன்மார்பின்
     புல்எருக்கங் கண்ணி நறிது"

 என வரும்.

     [பரத்தையிற் பிரிந்து மீண்டு வந்த தலைமகனுடன் ஊடிய தலைவி கூற்று இது.
 இதன்கண் குவளையை அவள் விரும்பாமைக்கும், எருக்க மாலையை அவள்
 விரும்புதற்கும் உரிய காரணம் குறிப்பிடப்படவில்லை. புதல்வற் பயந்த பூங்குழல்
 மடந்தை பரத்தையிற் பிரிந்து வந்த கிழவனோடு புலந்து உரைக்கின்றாள் ஆதலின்
 குவளை புலால் நாறுவதற்கு அவன் தவற்றோடு கூடிய அவள் காதல் காரணம்
 என்பதும், மகிழ்நன் செய்த துனி கூர் வெப்பம் தன் முகிழ்நகை முகத்தால் தணிக்கும்
 புதல்வன்மேல் ஒருகாலைக்கு ஒருகால் பெருகும் அன்பு அப்புதல்வன் பூண்ட
 எருக்கங்கண்ணி நறிதாதற்குக் காரணம் என்பதும் குறிப்பால் பெறப்பட வைத்தவாறு.
 இங்ஙனம் கருதிய பொருளைத் தெளிவாக உணருவதற்கு உரிய சொற்களைச்
 செய்யுளில் அமைக்காது, உய்த்துணருமாறு செய்தலையே கௌட நெறியார் வேண்டுவர்
 என்பது இவர் கருத்து.]