84

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     பண்பு உவமை

    "பவளத்து அன்ன மேனி"- அகநா. கடவுள் வாழ்த்து

    "வேய்புரை பணைத் தோள்"- அகநா.1

    "தெம்முனை இடத்தின் சேயகொல்
     அம்மா அரிவைஅவர் சென்ற நாடே"

 எனவும்,

     [பவளத்தின் நிறம் ஈண்டு மேனிக்கு உவமை;

     மூங்கிலின் வடிவு தோளுக்கு உவமை.

     தலைவன் பண்டு போரிடற்குச் சென்ற தூரம், இப்பொழுது பொருள் தேடச்
 சென்ற தூரத்துக்கு உவமை ஆதலின் இதுவும் வடிவுபற்றிய உவமையாய்ப் பண்பினுள்
 அடக்கப்பட்டது.      இத்தகையனவற்றைப் பேராசிரியர் "வினைபயன்"
 (தொ. பொ. 276) என்ற நூற்பாவின் "வகைபட வந்த" என்ற மிகையால் உவம
 வகைகளுக்குள் அடக்கிக் கூறியுள்ளார்.]

 தொழில் உவமை

    "களிற்றுஇரை தெழீஇய பார்வல் ஒதுக்கின்
     ஒளித்துஇயங்கு மரபின் வயப்புலி போல"                  - அகநா. 22 

 எனவும்,

     [களிறாகிய இரையைத் தவறாமல் கொள்ளும் பொருட்டுப் பார்வையை ஒதுக்கிப்
 பதுங்கிச் செல்லும் புலியினைப் போலத் தலைவியை இரவுக்குறிக்கண் காவலர்
 அறியாவகை வந்து தவறாமல் அடைவதற்குத் தலைவன் ஒதுங்கி வருகின்றான்
 என்பது-தலைவியைத் தவறாது அடைவதற்கே தலைவன் பதுங்கி வருகின்றான்;
 பிறருக்கு அஞ்சி ஒதுங்கி வருகின்றான் அல்லன். ஒதுங்கி வருதல் அவன் பண்பு
 அன்று; இரவுக்குறிக்கண் அவன் கொள்ளும் தொழிலே. ஆதலின் தலைவன்
 தொழிலுக்குப் பதுங்கித் தவறாது இரைகோடற்குவரும் புலியின்தொழில் உவமையாயிற்று.]