புதல்வற்கும் வடிவான் உவமை ஆயினும் தோற்றத் திற்கு அவை இரண்டும் உவமையாய் ஒருங்கு விரவி வருதலும், "தேன்மொழி" எனத் தேனின்கண் உளதாகிய நா இனிமையும் மொழியின்கண் உளதாகிய செவி இனிமையும் விரவி உவமித்தலும்,
"புறம்குன்றி கண்டனைய ரேனும் அகம்குன்றி
மூக்கின் கரியார் உடைத்து"
- குறள் 277
எனவும்,
"கூழின் மலிமனம் போன்றுஇரு ளாநின்ற கோகிலமே", - திருக்கோவை 322
எனவும், பொறியும் புலனும் வேறாயவற்றையும் விரவு உவமித்தலும் இன்னோரன்ன பிறவும் கொள்க.
[யானையால் விடப்பட்ட பச்சை மூங்கில் வளைவு நீங்கி மீண்டும் நிமிர்வதற்கு, மீன் பிடிக்கும் தூண்டில் உயரத் தூக்கப் படுவதனை உவமையாகக் கூறும் இடத்து, வடிவும் தொழிலும் உவமையாக அமைந்திருக்கின்றன. காந்தட் பூவின் மகரந்தத்தை அதன்கண் ஊதும் வண்டு, கையால் மேல் எறிந்து விளையாடப்படும் வட்டுக்காயைப் போலக் காணப்படும் என்ற தொடரில், காந்தட் பூவில் அமரும் தொழிலை ஒப்பது மேற்சென்று வட்டுக்காய் கையை வந்து அடைவது. ஆகவே இப்பகுதியில் காந்தளை ஊதும் தும்பிக்குக் கையால் ஆடப்படும் வட்டு, நிறம் வடிவு தொழில் என்ற மூன்றும் பற்றி உவமையாகிறது.
உவமைக்கு வினை பயன் மெய் உரு என்ற நான்கனுள் ஒன்றே நிலைக்களம் ஆதல்வேண்டும் என்ற வரையறை இன்று. அவற்றுள் இரண்டும் மூன்றும் நிலைக்களமாக வருதலும் கூடும். |
|
|