செய்யுளியல் - நூற்பா எண் 25 | 137 | | ஆசிரியப்பா வகையின் இலக்கணம் | | 734. | அந்த அடியின் அயல்அடி சிந்தடி வந்திடின் நேரிசை ஆசிரியம் ஆதலும், அளவடி அந்தமும் ஆதியும் ஆகிக் குறளடி சிந்தடி என்றா இரண்டும் இடைவர நிற்பின் இணைக்குறள் ஆதலும், ஒத்த அடித்தாய் உலையா மரபொடு நிற்பின் நிலைமண் டிலமா குதலும், மனப்படும் அடிமுதல் இடைஈறு ஆயின் அடிமறி மண்டில ஆசிரியம் ஆதலும், நடைதெரி புலவர் நாடினர் கொளலே. | | | | | | இது முற்கூறிய ஆசிரியப்பாக்கள் ஆமாறு கூறுகின்றது. இ-ள் : ஈற்றுஅடியின் அயலடி முச்சீர் அடியாக நடப்பின் அது நேரிசை ஆசிரியப்பா ஆதலையும், ஈறும் முதலும் நாற்சீர் அடியாய் இருசீர்அடியும் முச்சீர்அடியும் ஆகிய இரண்டு அடியும் இடைஇடையே வந்து நிலைபெறின் அஃது இணைக்குறள் ஆசிரியப்பா ஆதலையும், சீர்தம்மில் அளவுஒத்த அடியினை உடைத்தாய்க் கெடாத தன்மையொடு நிற்பின் அது நிலைமண்டில ஆசிரியப்பா ஆதலையும், யாதானும் ஓர் அடியை முதல் அடியாக, இடை அடியாக ஈற்று அடியாகக் கூறினும் ஓசையும் பொருளும் சிதையாமல்வரின் அஃது அடிமறி மண்டில ஆசிரியப்பா ஆதலையும் இலக்கண நெறியை அறியும் அறிவுடையோர் ஆராய்ந்து கொள்க என்றவாறு. | |
|
|
|