302

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
     வரலாறு :
  `வாஅம் புரவி வழுதியோடு எம்மிடைத்
தோஒம் நுவலும்இவ் வூர்'
 
     
     இதனுள் புரவி வழுதி என்று அடைப்பெயர் சார்த்தி அளபெடுப்பத் தொடுத்தலின்
தொடையானந்தம்.
  `வாஅ வழுதி மதுரை மறுகினில்
போஒ பகைமுனைப் போர்'
 
     
இஃது அடையடாமையின் மிக்க வழு.

     இனி, ஆனந்தப்பையுள் என்பதும் ஒன்று உண்டு. அஃதாவது களவினுளாயினும்
கற்பினுளாயினும் தலைவனும் தலைவியும் தம்மில் பிரிந்துழிப் பிரிவாற்றாது கையறு
துயரமொடு காட்சிக்கு அவாவி, மெய் மெலிவுற்று அழிவுழி இரங்கிப்
பாட்டுடைத்தலைவனது நாடானும் ஊரானும் குறித்து அவன் ஊர்மேல் அன்றில்
ஏங்கினும், குயில் கூவினும், ஆயர் குழலிசை கேட்பினும், ஏற்றின் மணிக்குரல்
கேட்பினும், அவனாடு சூழ்ந்து கிடந்து அவள் ஏங்கினும் என் உயிர்கழியும் என்று
இவ்வாறு கூறினும், அவன்ஊர் அனையாள் நாடனையாள் உயிர்கழிகின்றது எனினும்
பிறவாற்றானும் குணம் மேம்பட்டன ஊரும் நாடும் பார்த்துச் சார்த்திக் கூறினும்,
உவப்பினும் அவை ஆனந்தப் பையுள். என்னை?
  `களவினும் கற்பினும் கலக்க மில்லாத்
தலைவனும் தலைவியும் பிரிந்த காலைக்
கையறு துயரமொடு காட்சிக்கு அவாவி
எவ்வமொடு புணர்ந்து நனிமிகப் புலம்பப்
பாடப் படுவோன் பதியொடும் நாட்டொடும்
உள்ளுறுத் திறினே உயர்கழி ஆனந்தப்
பையுள் என்று பழித்தனர் புலவர்'
 
     
என்று எடுத்தோதினார் அகத்தியனார். அவற்றுக்கு இலக்கியம் வந்துழிக் கண்டுகொள்க.