செய்யுளியல் - நூற்பா எண் 50

303

 
     மாபுராணமுடையார் விகாரமாத்திரையாகிய உயிரள பெடையும்,
கால்மாத்திரையாகிய ஒற்றும் (மகரக்குறுக்கம்) பாட்டுடைத் தலைமகன் பெயருக்கும்
அவன் பெயர்க்கு அடையாகிய சொற்கண்ணும் புணர்ப்பின் குற்றம் என்றார்.

     இசையானந்தமாவது அவலமுற்றிருந்தோருக்கு இசையாகிய பஞ்சமமும்,
குறிஞ்சியும், பியந்தையும், பாலையாழும், காந்தார பஞ்சமமும் இவற்றோடு
பியந்தையாழும், தலைவனைப் புகழ்ந்த பாடாண்பாட்டிற்கும் இசையாகி வரப் புணர்ப்பது
என்பதாம்.

     பாட்டுடைத்தலைவனையே கிளவிப்படக் கிளவித்தலைவனாகக் கூறுவதூஉம்
ஆனந்தம் எனக் கொள்க. என்னை
  `உருவி யாகிய ஒருபெருங் கிழவனை
அருவிக் கூறுதல் ஆனந் தம்மே'
 
     
     என்றாராகலின். பாட்டுடைத்தலைவனுக்கு இயற்பெயர் உண்டு. அவனை
இயற்பெயரில்லாத கிளவித்தலைவனாகக் கூறுவதும் ஓர் ஆனந்தம் என்ப.

     இவையாவும் யாப்பருங்கல விருத்தியின் 95-ஆம் நூற்பா உரையுள்
கூறப்பட்டுள்ளன.

ஒத்த நூற்பாக்கள்

  `உறுபுகழ் மரபின் உயர்ந்தோர் கூறிய
அறுவகை மரபின ஆனந் தம்மே.'

`அவைதாம்,
இயனெறி திரிந்த எழுத்தா னந்தமும்
சொன்னெறி வழீஇய சொல்லா னந்தமும்
புகழ்ச்சிநிலை திரிந்த பொருளா னந்தமும்
யாப்புநிலை திரிந்த யாப்பா னந்தமும்
தூக்குநெறி திரிந்த தூக்கா னந்தமும்
நடைஅறி புலவர் நாடினர் இவையே.'