76

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

 

`இருசீர் முச்சீரும் நாற்சீரும் ஐஞ்சீரும் ஐந்தின்மிக்கு
வருசீரும் அந்தரங், கால், தீப், புனலொடு, மண், பெயரால்
திரிசீ ரடியாம்; குறள்சிந்து அளவு நெடில்தகைமை
தெரிசீர்க் கழிநெடில் என்று நிரல்நிறை செப்புவரே.'
 
 

- வீ. சோ. 109

 

 

`இருசீ ரான்வரல் குறளடி எனலே.'  
 

- மு.வீ.யா. 14

 

 

`முச்சீ ரான்முடி வதுசிந் தடியே.'  
 

- மு.வீ.யா. 15

 

 

`நாற்சீ ரான்வரல் அளவடி யாகும்.'  
 

- மு.வீ.யா. 16

 

 

`ஐஞ்சீ ரான்வரு வதுநெடி லடியே.'  
 

- மு.வீ.யா. 17

 

 

`அறுசீர் முதலை யிருசீ ரடிகடை
யாக வருவது, கழிநெடி லாகும்.'
 
 

- மு.வீ.யா. 18

 
 

11

 

அடிகளின் செய்யுட்குரிமை

721.

வெண்பா அகவல் கலிநேர் அடியும்
ஒண்பா வஞ்சி குறள்சிந்து அடியும்
பாஇனம் எல்லாப் பாதமும் பெறுமே.
 
     
இது மேற்கூறிய அடிகள் செய்யுட்கு உரிய ஆமாறு கூறுகின்றது.

     இ-ள் : வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலிப்பாவும் அளவடியும், ஒள்ளிய
வஞ்சிப்பாக் குறள்அடியும் சிந்து அடியும், பாஇனம் எல்லா அடியும் பெற்று நடக்கும்
என்றவாறு. நேரடி எனினும் அளவடி எனினும் ஒக்கும்.

அளவடியான் வந்த வெண்பாவிற்குச் செய்யுள்:

 

`வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லை;
அளந்தன போகம் அவர்அவர் ஆற்றான்;
விளங்காய் திரட்டினார் இல்லை; களங்கனியைக்
கார்எனச் செய்தாரும் இல்'
 
 

- யா. கா. 23 மே ; நாலடி.103

 
எனவும்,