இரண்டு பண்புச்சொற்கள் சினைச்சொல்லோடு தொடர்தலு முறைமயங்கித் தொடர்தலும் செய்யுளிடத்து மரபு. உலகத்தில் இல்லாத பொருளைக் குறிக்கும் மொழியையும், இத்தனை என்று எல்லோரும் அறிந்துள்ள பொருளைக் குறிக்கும் மொழியையும் முடிக்கும் சொல்லோடு கூறும்போதும், பொருளும் இடமும் காலமும் முதலியவற்றோடு சேர்த்துக் கூறும்போதும் முற்றும் எச்சமும் ஆகிய இவ்விரண்டும் உம்மையைச் சேர்த்துச் சொல்லவேண்டும். குடி, சாதி, நிலம், பண்பு, உடைமை, தவம், தொழில், சிறப்பு, கல்வி, சினை, திணை முதலியவற்றோடு இயற்பெயர் பொருந்தி வந்தால் அது ஏனையபெயர்களுக்குப் பின்னே வருதல் மரபு. விளக்கம் : செங்கால் நாரை - பண்புச்சொல்லும் (செம்) சினைச் சொல்லும் (கால்) முதல் சொல்லும் (நாரை) அம்முறையே வந்தன. சிவந்த பெரிய நாரை: இரண்டு பண்பு (சிவந்த, பெரிய) முதலோடு (நாரை) வந்தது. சிறிய மெல்லிய இறகு: இரண்டு பண்பு (சிறிய,மெல்லிய) சினையோடு (இறகு) வந்தது. செவிசெஞ்சேவல் : சினை (செவி) பண்பு (செம்) முதல் (சேவல்) என முறை மாறி வந்தது. நாட்டில் இலாப்பொருள் : குருடன் பார்ப்பது பகலிலும் இல்லை. இனைத்தென அறிந்தபொருள் : தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார். சாதிப்பெயரும் இயற்பெயரும் : பார்ப்பான் நாராயணன். |