சுவாமிநாதம்150சொல்லதிகாரம்
 

     இது இலக்கண விளக்கம் 333, 334, 335, என்ற சூத்திரங்களையும்
இறுதிப்பகுதி இலக்கணக்கொத்து 79ஆம் சூத்திரத்தையும் தழுவியது.

      ‘‘அறுதொகை அறைகுவர் அறிவுடையார் பலர்;
       படுதொகையொடு தொகை ஏழென்பார் சிலர்’’

என்பது இலக்கணக்கொத்துச் சூத்திரம்.

66. வேற்றுமையின் தொகை உருபின் பொருட்காட்டும்: உவமையேல்
     உருப்பண்பு ஆதிதொக்கு விரிக்கும்; உம்மைத்தொகையின்
கூற்று இரண்டுமுதற் பலபேரிடத்து உம்மை தொகுத்துக்,
     குறிக்குநால்வகை யளவைப் பொருள்விரித்துக் காட்டும்;
தூற்று வினைத்தொகை காலத்துஇயலும்; ஐந்தாம்பண்புத்
     தொகைஇன்னது இதுவென விசேடம் ஒன்றிற்காட்டும்,
சாற்றுஅன்மொழி, ஐந்தொகை ஈற்று அங்ஙன்வேறு ஒருபேர்
     தனைக் காட்டுந்; தொடர்மொழியிற் படுசொலுந்
                                    தொக்குறுமே.   (13)

இது அறுவகைத் தொகையின் இலக்கணம் கூறுகின்றது.

     உரை : வேற்றுமைத்தொகை அதற்குரிய வேற்றுமை உருபின்
பொருளில் வரும். உவமைத் தொகையில் உருவம், பண்பு முதலிய
விளக்கும்சொல் மறைந்து நின்று அப்பொருளை விளக்கும். உம்மைத்
தொகையாவது இரண்டுக்கு மேற்பட்ட பல பெயர்ச் சொற்களிடத்து உம்மை
மறைந்து எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவைப்
பொருளை விரித்துக்காட்டும். வினைத்தொகை மூன்று காலத்தின் கண்
நிகழும். பண்புத்தொகை இன்னது இது என ஒன்றனை ஒன்று விசேடித்து
இரண்டு சொல்லும் ஒரு பொருள்மேல் வரும் இயல்பினை உடையது.
வேற்றுமைத்தொகை, உம்மைத் தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை,
உவமைத்தொகை ஆகியவற்றின் இறுதியில் வேறொரு பெயர் தோன்ற
வருமாயின் அன்மொழித்தொகை எனப்படும்.