(பாங்கற் கூட்டம்) இகுளைக்கூட்டு (பாங்கியிற்கூட்டம்) என நால்வகையினை உடைத்து. இயற்கைப் புணர்ச்சி முன் கைக்கிளை நிகழ்தல் கடன் ஆகும். விளக்கம் : இது நம்பியகப்பொருள் 25, 26, 27, 28 ஆகிய சூத்திரங்களைத் தழுவியது. ஆயினும் ஐந்திணையிலும் கைக்கிளையும் பெருந்திணையும் மயங்கும் என்பது நம்பியகப் பொருளில் காணப்படவில்லை. இகுளை என்பது இகுழை என்று இங்கு வந்துள்ளது. 81. | கடன்எனுங்கைக் கிளைஇறைவி குறிப்பு அறியுங் காறுங் கணவன்அணு காதுநின்று நெஞ்சொடுகூ றுதலாம்; அடர்தெய்வங் கிழத்தியினும் வரும்இயற்கைப் புணர்ச்சி, அகப்புணர்ச்சி, மெய்ப்புணர்ச்சி மறைப்புணர்ச்சிக்கு உரித்தா(ம்); மடமகட்கு நாண்,மடமும் பெருமை,உர(ன்), நிறைக்கு மருவுகுண மாதலின்முன் னகப்புணர்ச்சி உரித்தாம்; துடர்காட்சி முதலாகச் சாக்காடுஈ றாகச் சொற்பத்துங் கைவரின்மெய் யுறுபுணர்ச்சி யுரித்தே. [11] | இது கைக்கிளை, இயற்கைப்புணர்ச்சி ஆகிய இரண்டையும் விளக்குகின்றது. உரை : தலைவியிடத்து உண்டாகும் குறிப்பினைத்தான் அறியும் வரை தலைவன் அவளைச் சாராது நின்று நெஞ்சோடு சொல்லுதல் கைக்கிளையாம். தெய்வத்தாலும் தலைவியாலும் பெறப்படுவது இயற்கைப் புணர்ச்சி உள்ளத்தாற் புணரும் புணர்ச்சி மெய்யுற்றுப் புணரும் புணர்ச்சி என இரண்டும் களவுப் புணர்ச்சிக்கண் உரிய. தலைமகளுக்கு நாணும், மடமும், ஆகிய இரண்டும் பெருமையும், உரனும் நிறைந்த தலைவனைப் பொருந்தும் குணமாதலின், உள்ளப்புணர்ச்சி முன் நிகழ்தற்கு உரியது. காட்சி முதலாகச் சாக்காடு ஈறாக உள்ள பத்தும் நிகழுமாயின் மெய்யுறு புணர்ச்சி கூடுதற்கு உரித்தாம். |