பொதுச்சீரான நாலசைச்சீரில் தளைகொள்ளும்போது நிழற்சீர் எட்டும் கனிச்சீர்போலத் தளைபெறும். (எனவே நிழல்முன் நிரைவந்தால் ஒன்றிய வஞ்சித்தளை; நிழல் முன்நேர் வந்தால் ஒன்றாத வஞ்சித்தளை.) பூச்சீர் எட்டும் காய்ச்சீர் போலத் தளைபெறும். (எனவே பூ முன்நேர் வந்தால் வெண்சீர் வெண்டளை; பூ முன் நிரை வந்தால் கலித்தளை.) பாட விளக்கம் : ‘வஞ்சிக் கேரசைச் சீர்’ (2-வது வரி) என்ற மூலபாடம் ‘வஞ்சிக் கோரசைச்சீர்’ என்று திருத்தப்பட்டுள்ளது. 154. | தளையொன்று, குறள்இரண்டு, சிந்துமூன்று, அளவு தளை,நான்கு நெடில்,அடிஐந்து ஆதிகழி நெடிலாம், தெளிஅடிஐந்து இவையாம்;வெண் பாக்,கலிவஞ் சிக்கே, சிறுமைஇரண்டு; அகவல்ஒன்றாம் பெருமைபொருள் முடிவாம்; எளிதின்முதல் எழுத்துஒன்றல் மோனை;ஈற்று உறுஞ்சொல் எழுத்துஇசைத்தல் இயைபு;இரண்டாம் எழுத்துஒன்றல் எதுகை; வளைபொருட்சொல் முரணின்முரண்; அளபெடுக்கில் அளபா (ம்); மற்றுஇரட்டைத் தொடைஒருசொல் அடிமுழுதும் வரலே. [3] | அடியும் தொடையும் உணர்த்துகின்றது. உரை : இரண்டு சீரான் வந்த அடி குறளடி, மூன்று சீரான் வந்த அடி சிந்தடி, நான்கு சீரான் வந்த அடி அளவடி, ஐந்து சீரான் வந்த அடி நெடிலடி, ஐந்து சீருக்கு மேற்பட்ட சீரான் வருவது கழிநெடிலடி என அடி ஐந்து வகைப்படும். வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய மூன்றுக்கும் குறைந்த அளவு இரண்டு அடி; அகவலுக்குக் குறைந்தது ஒரு அடி; மிக நீண்ட அளவு, பொருள்முடிவைப் பொறுத்து அமையும். |