அசையும், சீரும், தளையும், சீரின் வகையும், தளையின் வகையும் உணர்த்துகின்றது. உரை : ஈரசையினால் ஆன நான்கு சீரும் (நேர் நேர்; நிரை நேர்; நிரை நிரை; நேர் நிரை) ஆசிரிய உரிச்சீர் எனப்படும்; இயற்சீர் என்றும் கூறப்படும். மூவசையால் ஆன சீர் எட்டுச்சீரில் நேர் அசையை இறுதியில் (நேர் நேர் நேர்; நிரை நேர் நேர்; நிரை நிரை நேர்; நேர் நிரை நேர்) கொண்டுள்ள நான்கு சீரும் வெண்பா உரிச்சீர் எனப்படும். நிரையை இறுதியில் கொண்டுள்ள நான்கு சீரும் (நேர் நேர் நிரை, நிரை நேர் நிரை, நிரை நிரை நிரை, நேர் நிரை நிரை) வஞ்சி உரிச்சீர் எனப்படும். ஓரசைச் சீர் இரண்டு. நாலசைச் சீர் பதினாறு. அவை பொதுச் சீர் எனப்படும். மூன்று வகைச் சீரும் (ஆசிரியவுரிச்சீர், வெண்பாவுரிச்சீர், வஞ்சியுரிச்சீர்) பொருந்துவதால் ஏழு வகைத் தளையுண்டாம். விளச்சீரோடு (கருவிளம், கூவிளம்-நிரை அசையில் முடிவது) நிரைவந்து சேருவது நிரையொன்றாசிரியத் தளை எனப்படும். மாச்சீரோடு (தேமா, புளிமா-நேர் அசையில் முடிவது) நேர்வந்து சேருவது நோரான்றாசிரியத்தளை எனப்படும். மாச்சீரோடு (நேர்) நிரையசைவந்து ஒன்றுவதும் விளச்சீரோடு (நிரை) நேரசை வந்து ஒன்றுவதும் இயற்றளை (இயற்சீர் வெண்டளை) எனப்படும். காய்ச்சீரோடு (மூவசையுடையதாய் நேரசையை ஈற்றில் உடைய தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய் கூவிளங்காய்) நேரசை வந்து சேருவது வெண்சீர் வெண்டளை எனப்படும். காய்ச்சீரோடு நிரையசை வருவது கலித்தளையாகும். கனிச்சீரோடு, (மூவகை உடையதாய் நிரையசையை இறுதியில் உடைய தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி) நிரையசை ஒன்றினாலும் நேரசை ஒன்றினாலும் வஞ்சித்தளை. (முன்னது ஒன்றிய வஞ்சித்தளை என்றும் பின்னது ஒன்றாத வஞ்சித்தளை என்றும் விதந்து அழைக்கப்படும்.) விளக்கம் : காரிகையில் ஓரசைச் சீருக்கும் தளை கொள்ளும் முறை கூறப்பட்டுள்ளது; இந்நூலில் அச்செய்தி, கூறப்படவில்லை. |