பல்வேறு துறைகளைத் தனியே பாடுவதும் உண்டு. கலி, பாலை, முல்லை, வஞ்சி, கடிகமாலை, விலாசம், தூது, மஞ்சரி ஆகிய பெயர்கள் அவ்வகையில் அடங்கும். 167. | மொழிபொருளிற் காப்புமுதற் சிறுதேர்மட் டாண்பின் முன்றில்கழங்கு அம்மனைஊஞ் சல்பேணுங்கிளைச்சீர் வகுப்போடு அழிவின்அக வலின்விருத்தத்து அறைதல்பிள்ளைக் கவியாம், அகம்புறமும் தனித்தனிமுற் றுரைத்தலவ்வக் கோவை; வழுவில்அகப் பொருளின்ஏற் பனஅகரா தியதாய் வருக்கம்பா டுதல் வருக்கக் கோவை; கலித்துறையாம் எழும்இறைவன் சீரும்அவன் பவனியுங்கண்டு ஏத்தும் ஏழ்மடவார் பருவமும்பா டுதல்உலா இயல்பே. [6] | பிள்ளைக்கவி, கோவை, உலா ஆகியவற்றின் இலக்கணம் கூறுகின்றது. உரை: காப்பு முதல் சிறுதேர் வரை (காப்பு, தாலாட்டு, செங்கீரை, சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிறுபறை முழக்கல், சிற்றில்சிதைத்தல், சிறுதேர்உருட்டல்) ஆண்பாற்பிள்ளைத் தமிழுக்கு உரியன. பெண்பாற் பிள்ளைத் தமிழுக்குப் பின் மூன்று பகுதி இல்லாமல் கழங்கு, அம்மானை, ஊஞ்சல் (ஊஞ்சல்=ஊசல்) என்ற மூன்றையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். பிள்ளைக்கவி (பிள்ளைத்தமிழ்) வகுப்பாலும் ஆசிரிய விருத்தத்தாலும் பாடவேண்டும். அகப்பொருள்மேல் வருவன அகப்பொருட்கோவை. புறப்பொருள்மேல் வருவன புறப்பொருட்கோவை. அகப் பொருளில் ஏற்பனவற்றைக் கொண்டு அகர வரிசைப்படி வருக்கத்தால் பாடுவது வருக்கக்கோவை. கலித்துறையால், வீதியிடை செல்கின்ற தலைவன் சிறப்பையும் அவன் உலாவையும் பார்த்துப் புகழ்கின்ற ஏழு பருவ மங்கையரையும் பாடுதல் உலா. |