அகவல் விருத்தமதால் பகர்ந்தான்; முன்னூல் வழியாய்ப் பகர்ந்தான்; ஏதுவினால் பகர்ந்தான் எனக் கூட்டுக. மெய் அநித்தம், நூல்விரிவு என்றது சின்னாட் பல்பிணி சிற்றறிவினோர் என்ற தொடரை உட்கொண்டு. 3. | நூலின்வகை முதல்வழிசார் பெனமூன்றாம்; இறைசொன்னூல் முதனூல்;அவ் வழித்தாய்ச் சிலவிகற்ப மாம்வழிநூல் மேல்இரண்டிற் றிரிந்துகா லந்தழுவும் புடைநூல் விரிக்கும் இவை பாயிரங்கள் தோற்றிஏழ் மதத்தாய் நாலுபயத் தாய்ப்பதின்மா சகன்றுபதின் குணத்தாய் நாலெட்டாம் உத்தியின்ஓத் துப்படல உறுப்பிற் காலின்சூத் திரம்காண்டி விருத்திநடைத் தாகிக் காண்குமவற் றினிற்பதிகம் பொதுச்சிறப்பென் றிரண்டே. (2) | இப்பாடல் நூலின் வகையும் அவற்றின் விளக்கமும் நூலின் தன்மையும் பதிகத்தின் வகையும் கூறுகின்றது. உரை : முதல்நூல், வழிநூல், சார்புநூல் என நூல் மூன்று வகைப்படும். இறைவன் சொன்னது முதல் நூல் எனப்படும். முதல் நூலைத் தழுவிச் சில வேறுபாடுகளையும் அமைத்துக் கூறுவது வழிநூல் ஆகும். முதல் நூல், வழிநூல் ஆகிய இரண்டிலிருந்தும் வேறுபட்டுக் காலத்திற்கேற்ற கருத்துக்களையும் தழுவிச் செல்வது புடைநூலாகும். நூல் பாயிரங்களை அமைத்துக் கொண்டு ஏழுவகை மதத்தையும் நால் வகையான பயனையும் உடையதாகவும் பத்து வகைக் குற்றமும் இல்லாமல் பத்து வகையான அழகும் முப்பத்திரண்டு உத்தியும் உடையதாகவும் ஓத்து, படலம் ஆகிய உறுப்புக்களோடு சூத்திரமாக அமைந்தும் காண்டிகை விருத்தி என இரு வகையான உரை பெறும் தன்மையோடு அமைவது. இவற்றுள் பாயிரம் (பதிகம்) என்பது பொதுப்பாயிரம் சிறப்புப்பாயிரம் என இருவகைப்படும். |