காதலன்தன் னொடுகற்றோன், உரைபதிகம் சொலற்காம் கல்விமுதிர்ந் திடினுந் தான் தனைப்புகழ்த லாகா; வாதுவசை வரில்உணரா ரிடைவெல்லும் பொழுதில் வழுத்தலுமாம் பதிகமன் றேனூற்குமறு வுடைத்தே. (7) | இது சிறப்புப் பாயிரத்தின் இலக்கணம் கூறுகின்றது. உரை : நூல் செய்தோன் பெயர், நூலைப் படிப்பதற்கு உரியவர்கள், நூலின் பெயர், நூல் வந்த வழி, நூல் படிப்பதற்குரிய இயைபு, நூலின் எல்லை, நூல் கூறும் பொருள், நூலைப்படிப்பதன் பலன், நூல் செய்த காலம், நூல் அரங்கேற்றிய களம், நூல் செய்தற்குரிய காரணம் ஆகிய பதினொன்றும் நூலின் சிறப்புப் பாயிரத்தின் இலக்கணம். நூலின் சிறப்புப் பாயிரம் செய்வதற்குத் தன்னுடைய ஆசிரியர், மாணாக்கர், தன்மகன் தன்னோடு படித்தவன், உரைகாரன் ஆகியோர் தகுதி உடையவர். தான் கல்வியில் முதிர்ந்து விளங்கினாலும் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுதல் கூடாது. ஆனால் அவையில் வாது செய்யும் போதும் பழி ஏற்படும் போதும், தனது கல்வி வலிமையை உணராதவர் இடத்தும் தன்னைத்தான் புகழ்ந்து சொல்லலாம். பாயிரம் (பதிகம்) இல்லாவிட்டால் நூலுக்கும் குறை உண்டு. விளக்கம் : நன்னூலில் காலம், களம், காரணம் என்பதையும் சேர்த்துப் பதினொன்றாகக் கொள்வோரும் உளர் (48) என்று உள்ளது. |