சுவாமிநாதம்196பொருளதிகாரம்
 
106. தணப்புணர்த்தல்,தடை, நேர்வித் திடல்,நேர்தல் பிரிவாற்
     றான்கலங்கல், வன்புறைவன் பொறை,வருங்காற் கலங்கல்,
உணர்த்துவந்த மகிழ்ச்சி,ஒன் பதாய் அவட்கு என்பொருட்
                                           போக்கு
     உரையெனல்நீ உரையெனல்நீ டேன்எனக்கோ(ன்) நீங்கல்,
பணப்பிரிவை அவட்குஉணர்த்தல், அவள்இரங்கல் கடுஞ்சொற்
     பாங்கிசொலல், இறைவிகடு மொழிமொழிதல் பாங்கி
மணத்தலைவர் மீண்டுவரு குவர்எனவற் புறுத்தல்,
     மயில்பருவங் கண்டுஇரங்கல், இகுளைவம்பென் றிடலே [22]

வரைவு இடைவைத்துப் பொருள் வயிற்பிரிவு விளக்குகின்றது.

     1. பிரிவு அறிவுறுத்தல், 2. பிரிவைத் தடைசெய்தல் 3. பிரிவை
ஒத்துக்கொள்ளச் சொல்லுதல் 4. (தலைவி) பிரிவை ஒத்துக்கொள்ளுதல்,
5. பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் கலங்குதல், 6. வன்புறை
(ஆற்றியிரு என்று வற்புறுத்திக்கூறல்), 7. வன்பொறை (பெரிதாகப்
பொறுத்துக்கொள்ளுதல்), 8. தலைவன் வந்தபோது கலங்குதல், 9. தலைவன்
வந்ததால் மகிழ்ச்சியடைதல் என்ற ஒன்பதும் வரைவிடைவைத்துப் பொருள்
வயிற்பிரிவு என்ற துறையின் பெரும் பிரிவாகும். 1. நான் பொருள்
ஈட்டுவதற்குப்போகிற செய்தியைத் தலைவிக்குக் கூறுக எனத் தோழியிடம்
கூறுதல், 2. தோழி தலைவனையே அச்செய்தியைக் கூறும்படிசொல்லுதல், 3.
காலம் நீடிக்கமாட்டேன் என்று கூறித் தலைவன் நீங்குதல், 4. தலைமகன்
பொருள் ஈட்டுவதற்காகப் பிரிந்ததைத் தலைவிக்குத் தோழி கூறுதல், 5.
தலைமகள் வருந்துதல், 6. தோழி தலைவியிடம் கடுஞ்சொற்களைக் கூறுதல்,
7. தலைவி கடுஞ்சொற்களைச் சொல்லுதல், 8. தலைவன் திரும்பி வந்து
விடுவான் என்று வற்புறுத்தித் தோழி கூறுதல், 9. தலைவன் குறிப்பிட்ட
பருவம் வந்துவிட்டது என்று உணர்ந்து தலைவி வருந்துதல், 10. தோழி
பருவமில்லாத பருவம் என்று கூறுதல்.

     விளக்கம் : இது அகப்பொருள் 169, 170.9 வரையுள்ள பகுதியைப்
பின்பற்றியது.