சுவாமிநாதம்229புறத்திணை மரபு
 

     பாட விளக்கம் : குற்றிழிஞை என்ற மூல பாடம் குற்றுழிஞை என்று
திருத்தப்பட்டுள்ளது.

136. மங்கலமாய் மதிற்குமரி மணத்தல்,எயில் கொண்டோன்
     மதில்வேந்தன் மகட்கேட்கு மிகல்,திரைகொண்டு ஏகல்,
பொங்குமுற்றி னோற்போக்கி யிருத்தல்,வேற் றரசர்
     பொருமதிலின் அடைதொகையோடு எண்ணான்காம்;
                                      அரண்காப்பு,
இங்குநொச்சி சூடல்முன்போய் விளிந்தமறப் பாசி,
     இகல்மிளையூர்ச் செருமிளைகாத் தோர்விறன்மேம்
                                       படுத்தல்
அங்குதிரை மறம்,எயிற்போர், எயிலின்மிசை அழிதல்,
     அழிபடைதாங் குதல்மகட்கோண் மறுத்தல்ஒன்பான் 
                                    தானே.    [8]

உழிஞையின் ஒருபகுதியும் நொச்சியும் கூறுகின்றது.

     உரை : 28. மதிலாகிய பெண்ணை மணத்தல், 29. மதிலை வென்றவன்
மதில் உடைய மன்னனின் மகளை வேண்டிய முறைமையைச் சொல்லுதல்,
(மகட்பால் இகல்), 30. பகை மன்னன் கொடுத்த திறையை எடுத்துக் கொண்டு
செல்லுதல், 31. பிறரைப்போக்கிவிட்டுத் தான் மட்டும் பாசறையில் இருத்தல்,
32. அரசர் பலரும் மதிலிடத்தே உள்ள அவனைச் சேர்தல் என்ற
முப்பத்திரண்டும் உழிஞைத் திணைக்குரிய துறைகளாகும்.

     அரணைக்காத்து நிற்றல் நொச்சித்திணை. 1. எயில் காக்கும் வீரர்
நொச்சிப்பூவைச் சூடுதல், 2. முன்னே போரில் இறந்த வீரத்தின் போக்கைச்
சொல்லுதல், 3. காவற்காடு அழியாதபடி பூசல் செய்த மதிப்பினைக் கூறுதல்,
4. காவற்காட்டைக் காத்து நின்றோர் வெற்றியை மேம்படுத்திச்சொல்லுதல்,
5. (பெரிய அரணிடத்துப்பாயும்) குதிரையின் வீரத்தைக் கூறுதல், 6. மதில்
காக்கும் போரைப் பற்றிக் கூறுதல், 7. மதில் தாக்கப்படுவதைச் சொல்லுதல்,
8. அழியும் மதிலைப் படையானது காத்தல், 9. பகையரசன் மகளை வேண்ட
அவன் தர மறுத்தல் ஆகிய ஒன்பது துறைகளும் இத்திணைக்கு உரியன.