| எழுத்ததிகாரம் | 101 | முத்துவீரியம் |
9. ழகர ஈறு
சிறப்பு ழகரம்
368. சிறப்பு ழகரமெய்
யிருவழி யினுமிகும்.
(இ-ள்) சிறப்பாகிய
ழகரவொற்று அல்வழிவேற்றுமை யினுமிகும்.
(வ-று) கீழ்ச்சாதி,
பூழ்க்கால் எனவரும். (209)
கீழ்
369. டகார மாகும்
வேற்றுமைப் பொருட்கே.
(இ-ள்.) வேற்றுமைக்கண்
டகரமெய்யாகத் திரியுமென்க.
(வ-று.) கீழ் + திசை =
கீட்டிசை எனவரும். (210)
திகழ், சோழ என்பன
370. தநவரின் டணவா
மென்மனார் புலவர்.
(இ-ள்.) தகரம்வரின்
டகரமாகவும், நகரம்வரின் ணகரமாகவுந் திரியும்.
(வ-று.) திகழ் + தசக்கரம் =
திகடசக்கரம்: சோழ + நாடு = சோணாடு.
(வி-ரை.) திகழ் +
தசக்கரம் = திகட சக்கரம், பத்துத்
திருக்கரங்கள் என்பது பொருள்.
இவ்விதி
தொல்காப்பியம், நன்னூல் ஆகிய இரு நூல்களிலும்
இல்லை எனினும்
கந்தபுராணத்தில் இதற்கேற்ற
எடுத்துக்காட்டு உளது. அது வருமாறு:
‘‘திகட சக்கரச்
செம்முக மைந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர வின்மணி
யாவுறை
விகட சக்கரன்
மெய்ப்பதம் போற்றுவாம்’’
(கந்தபு - விநாயகர்
காப்பு) (211)
தாழும் கோலும்
371. தாழ்முன் கோல்வரி
னக்கொடு சிவணும்.
(இ-ள்.) தாழென்னுஞ்
சொற்குமுன், கோலென்னுஞ் சொல்வரின் அக்குச்
சாரியை
பெறும்.
|