எழுத்ததிகாரம்107முத்துவீரியம்

ஒரு மாத்திரையும் பெற்று நிற்கும் என்பது இளம்பூரணர் கூறும் பொருளாகும்.
நச்சினார்க்கினியர் ‘உகரம் நிலையும்‘ எனப் பாடம் ஓதி அறுவகைக் குற்றுகரங்களும்
தனிமொழியில் நிற்குங்கால் அரை மாத்திரை பெற்றது போலவே, புணர்மொழிக்கண் வரினும்
அவ்வரை மாத்திரை பெற்றே நிற்கும் எனப் பொருள் கூறி இளம்பூரணர் கருத்தை மறுப்பர்.

எனவே ‘நாகு’ என்ற விடத்தும், ‘நாகு கடிது’ என்றவிடத்தும் உகரம் அரை
மாத்திரையே பெறும் என்பது நச்சினார்க்கினியர் கருத்தாகின்றது. ‘நாகு’ என்ற விடத்து
உகரம் அரை மாத்திரையும், ‘நாகு கடிது’ என்ற விடத்து ஒரு மாத்திரையும் பெறும் என்பது
இளம்பூரணர் கருத்தாகின்றது. இளம்பூரணர் கருத்தின்படி நாகு கடிது என்றவிடத்து உகரம்
முற்றுகரமாக ஆகின்றது.

நச்சினார்க்கினியர் இளம்பூரணர் கருத்தை மறுப்பது பொருத்த மில்லை யெனினும்,
‘நாகு கடிது’ என்ற விடத்து உள்ள உகரத்தை முற்றுகரமாகக் கொள்வது பொருத்தமாகுமா?
என்பதும் ஆராயத் தக்கதே யாகும். (தொல் - எழுத்து - இளம் - 409 விளக்கவுரை) (230)

குற்றியலுகரம் தன்மாத்திரையிற் குறைதல்

390. இடைப்படிற் குறுகு மிடனுமா ருண்டே.

(இ-ள்) இடைப்படிற் கூறிய அரைமாத்திரையிற் குறுகு மிடனுமுண்டாம்.

(வ.று) சுக்குக்கோடு.

(வி-ரை) வன்றொடர் மொழிக் குற்றுகரங்கள் வல்லெழுத்து வருமொழியாய்
வருமிடத்துத் தன் அரை மாத்திரையினின்றும் குறுகும் என்பது இதன் கருத்தாகும்.
‘வல்லொற்றுத் தொடர் மொழி வல்லெழுத்து வருவழித் தொல்லை யியற்கை நிலையலும்
உரித்தே’ (குற்றிய - 4) என்பது தொல்காப்பியம். (231)

குற்றியலிகரம் வரும் இடம்

391. யகரம் வரும்வழி யிகரம் குறுகும்.

(இ-ள்.) யகரமுதன்மொழியாய் வரின் உகரங்கெட்டு இகரந் தன்மாத்திரையிற் குறுகும்.

(வ-று.) நாகியாது. (232)

ட, ற வொற்றிரட்டும் குற்றியலுகரங்கள்

392. நெடிலோ டுயிர்த்தொடர்க் குற்றுக ரங்களுட்
     டறவொற் றிரட்டும் வேற்றுமைப் பொருட்கே.