எழுத்ததிகாரம்114முத்துவீரியம்

எண்ணின்முன் எண்

416. இரண்டொழித் தேனைய விருநான் கெண்களும்
     பத்தின் முன்வருங் காலை யான
     குற்றிய லுகரம் முற்றக் கெடுமே
     ஒன்பா னொழியவின் னொடுவரு மென்ப.

(இ-ள்.) இரண்டென்னு மெண்ணொழிய மற்றைய வெட்டெண்களும் பத்தென்னு
மெண்முன் வருங்காற் குற்றியலுகரம் மெய்யொடுங் கெடும், ஒன்பதென்னு மெண்ணொழிய
மற்றைய வெண்க ளெல்லாம் இன்சாரியை பெறுமென வறிக.

(வ-று.) பதினொன்று, பதின்மூன்று, பதினான்கு. (257)

பத்தின்முன் இரண்டு

417. இரண்டு முன்வரிற் பத்தினீற் றுயிர்மெய்
     கரந்திட வொற்று னவ்வாகு மென்ப.1

(இ-ள்.) பத்தென்னுமெண்முன் இரண்டென்னு மெண்வரிற் பத்தினீற்றுயிர் மெய்கெடத்
தகரவொற்று னகரவொற்றாகத் திரியும்.

(வ-று.) பன்னிரண்டு. (258)

பத்தின்முன் ஆயிரம்

418. ஆயிரம் வரினு மின்னொடு நிலையும்.

(இ-ள்.) ஆயிரமென்னும் எண்வரினு மின்சாரியை பெறுமென்க.

(வ-று.) பதினாயிரம் எனவரும். (259)

பத்தின்முன் நிறையும் அளவும்

419. நிறையு மளவு நேருங் காலைக்
     குறையா தாகு மின்னென் சாரியை.

(இ-ள்.) நிறைப்பெயரு மளவுப் பெயரும் வந்து புணரின் இன்சாரியை பெறும்.

(வ-று.) பதின்கழஞ்சு, பதின்கலம். (260)

1. நன் - எழுத். உயிரீற் - 48.