சொல்லதிகாரம்124முத்துவீரியம்

2. சொல்லதிகாரம்

பெயரியல்

சொல்லதிகாரமென்பது சொல்லினது அதிகாரத்தையுடையதெனப் படலத்திற்குக்
காரணக்குறி யாயிற்று. சொல்லென்றது எழுத்தினாலாக்கப்பட்டு இருதிணைப்
பொருட்டன்மையும் ஒருவன் உணர்தற்குக் கருவியாம் ஓசையாகிய
பெயர்வினையிடையுரியென நால்வகைச் சொல்லும் பிறவுமாம்.

தற்சிறப்புப்பாயிரம்

458. உருபமும் அருபமும் உருபரு பமுமுளன்
     இலனெவ னவற்றொழு தியம்புவன் சொல்லே.

(இ-ள்.) வடிவமும் வடிவமின்மையும் வடிவுவடிவின்மையுமுளன் இலனெவன் அவனை
வணங்கி யான் சொல்லிலக்கணத்தைக் கூறுவேனென வறிக. ஏகாரம் ஈற்றசை. (1)

சொற்கள் பொருள் குறித்து வருதல்

459. எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே.1

(இ-ள்.) மேற்கூறிப்போந்த சொற்களெல்லாம் பொருளைக் குறித்தனவேயாம்;
பொருளைக் குறியாது நில்லாவாமென்றுணர்க. (2)

சொல் தன்னையும் பொருளையும் உணர்த்துதல்

460. சொல்லையும் பொருளையுஞ் சொல்லா னுணர்தல்.

(இ-ள்.) சொற்றானே யறியப்படுதலுந் தன்னின் வேறாகிய பொருளா
லறியப்படுதலுமாகிய இருமையுஞ் சொல்லாம். (3)

அதன் வகை

461. பெயர்வினை யிடையுரி யெனச்சொன் னான்கே.

1. தொல் - சொல் - பெயர். 1.