எழுத்ததிகாரம்20முத்துவீரியம்

ஓசையின் வகை

59. எடுத்தல் படுத்த லிரண்டே யோசை.

(இ-ள்.) ஓசையெடுத்துக் கூறலும், படுத்துக் கூறலுமென இரண்டுவகைப்படுமென்க.

(வி-ரை.) நலிதல், விலங்கல் ஆகியவற்றானும் ஓசை வேறுபடும் என்பர் இளம்பூரணர்.
(தொல்-பிறப்-6) (59)

மொழிக்கு முதலாகும் எழுத்துக்கள்

60. முன்நான் குயிரு மொழிமுத லாகும்.

(இ-ள்.) பன்னிரண்டுயிரும் மொழிக்கு முதலாகும்.

(வ-று.) அணி-ஆசை, இருள்-ஈகை, உலகு-ஊமை, எருமை-ஏனாதி, ஐயம்,
ஒருவன்-ஓகை, ஒளவியம். (60)

இதுவுமது

61. பன்னீ ருயிரொடுங் க, ச, த, ந, ப, ம வரும்.

(இ-ள்.) க, ச, த, ந, ப, ம க்களாகிய ஆறு மெய்யும் பன்னிரண்டுயிரோடு மொழிக்கு
முதலாகும்.

(வ-று.) கலை - காமன், கிளி - கீரி, குருகு - கூகை, கெறுவம் - கேகயம்,
கைத்தாளம், கொறுக்கை, கோதை - கௌவை எ-ம். சடை - சாரிகை, சித்திரம் - சீனம்,
சுக்கு - சூகை, செக்கு - சேனை, சையம் - சொக்கு - சோமன், சௌரி எனவும்வரும்
பிறவுமன்ன.

(வி-ரை.) சகரம் அ, ஐ, ஒள ஆகிய மூன்றெழுத்துக்களுடன் வாராதென்பர்
தொல்காப்பியர். (மொழிமரபு 29). நன்னூலாரும் பிரயோக விவேக நூலாரும்
பன்னீருயிருடனும் வரும் என்பர். இவ்வாசிரியர் இவர்களைத் தழுவியுரைத்துள்ளார். சகரம்
அகரத்துடன் கூடிவரும் சொற்கள் தமிழ்ச் சொற்களாக வுள்ளன. ஐகார ஒளகாரங்களுடன்
கூடிவரும் சொற்கள் பெரும்பாலும் வட சொற்களாகவே இருக்கின்றன. இந்நுண்மையறிந்த
இலக்கண விளக்க நூலார் சகரம் ஐகார ஒளகாரங்களுடன் வருதலை மட்டும் விலக்கினர்.
இதுபற்றிச் சிவஞான முனிவர் கூறியுள்ளதும் ஈண்டு நினைவு கூர்தற்குரியதாகும். இனிச்
‘சகரக்கிளவியும் அவற்றோ ரற்றே, அ, ஐ, ஒள வெனும் மூன்றலங்கடையே’ என்பது முதலாக
இன்னோரன்ன சிலவெழுத்துக்களை மொழிக்கு முதலாகாவென ஆசிரியர் தொல்காப்பியர்
விலக்கினாராலோவெனின், இவ்வடமொழிகளும் திசைச் சொற்களும் அக்காலத்து இவ்வாறு
தமிழின்கட் பயின்று வாராமை பற்றியென்க’ என்பது அவர் உரை. சையம், சௌரி என்பன
ஆரியச் சிதைவு என்பர் இளம்பூரணர். (61)