சொல்லதிகாரம்200முத்துவீரியம்

(வ-று.) பிறரும் வாழ்வாருளரேனும் பார்ப்பனச் சேரி, உயர் திணை; பிறபுல்லும்
மரனுமுளவேனும், கமுகந்தோட்டம்: அஃறிணை. (82)

பொதுப் பிரிபாற் சொல்

725. பெயரினும் வினையினும் பிரிபவை யெல்லாம்
     வழுவில வாமிரு திணைமருங் கினுமே.

(இ-ள்.) உயர்திணைக்கண்ணும், அஃறிணைக்கண்ணும், பெயரினானும், வினையினானும் பொதுமையிற்பிரிந்து ஆண்மைக்கும் பெண்மைக்கும் உரியவாய் வருவனவெல்லாம் வழுவாகாவாம்.

(வ-று.) தொடியோர் - கொய்குழையரும்பிய குமரி ஞாழல் - உயர் திணைக்கட்பெயரிற் பிரிந்த ஆணொழிமிகு சொல்; வடுகரசராயிரவர் மக்களையுடையர், பெயரிற்பிரிந்த பெண்ணொழி மிகுசொல்; இவர் வாழ்க்கைப்பட்டார், தொழிலிற் பிரிந்த ஆணொழிமிகுசொல்; நம்பி நூறெருமையுடையன், அஃறிணைக்கட்பெயரிற் பிரிந்த ஆணொழிமிகு சொல்; நம்மரசன் ஆயிரம் யானையுடையன், பெயரிற் பிரிந்த பெண்ணொழி மிகுசொல்.

(வி-ரை.) உயர்திணைக்கண்ணும் அஃறிணைக்கண்ணும் ஆண் பெண் இருபாற்குமுரிய பொதுச் சொற்கள், தத்தம் பால் பொதுமை யினின்றும் நீங்கிச் சிறப்பாக ஒவ்வொரு பாலுக்கே உரியதாய் வருதலுமுண்டு. இந்நிலை சிலவற்றிற்குப் பெயரினானும், சிலவற்றிற்கு வினையினானும் வரும். இதனையே ‘ஒன்றொழி பொதுச்சொல்’ என நன்னூலாரும் கூறுவர். (தொல் - சொல் - இளம் - விளக்கவுரை - 50) (83)

திணை விரவுப்பெயர் அஃறிணை முடிபின

726. திணைவிர வுப்பெயர் செய்யுண் மருங்கே
     அஃறிணை முடிபின வாகு மென்ப.

(இ-ள்.) திணைவிரவி எண்ணப்பட்டபெயர் செய்யுட்கண் பெரும்பான்மையும்
அஃறிணைப் பெயரைக்கொண்டு முடியும்.

(வ-று.)

‘வடுக ரருவாளர் வான்கரு நாடர்
சுடுகாடு பேயெருமை யென்றிவை யாறுங்
குறுகா ரறிவுடை யார்’.

‘கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய கலிமாவும்,
நெடுங்கொடிய நிமிர்தேரு நெஞ்சுடைய (புகன்) மறவரு மென
நான்குடன் மாண்ட தாயினும்’ (புறம்-55)