சொல்லதிகாரம்201முத்துவீரியம்

(வி-ரை.) எடுத்துக்காட்டு இரண்டினுள் முன்னையதில் ‘இவை ஈறு’ என்றும்,
பின்னையதில் ‘நான்குடன் மாண்டது’ என்றும் அஃறிணை முடிவு கொண்டவாறு காண்க. (84)

பலபொருள் ஒருசொல்

727. வினைவேறு படூஉம்பல பொருளொரு மொழியும்
     வினைவேறு படாப்பல பொருளொரு மொழியும்
          எனவிரு திறத்தவாம் பலபொரு ளொருமொழி.

(இ-ள்.) வினைவேறுபடும் பலபொரு ளொருசொல்லும் வினைவேறுபடாப் பலபொரு
ளொருசொல்லுமெனப் பல பொருளொரு மொழி இருவகைப்படு மென்க. (85)

வினை வேறுபடும் பல பொருளொருசொல்

728. அவற்றுள்,
     வினைவேறு படூஉம் பலபொரு ளொருமொழி
     வேறுபடு வினையினு மினத்தினுஞ் சார்பினுந்
     தேரத் தோன்றும் பொருடெரி நிலையே.

(இ-ள்.) மேற்கூறிப்போந்த அவ்விரண்டனுள் வினைவேறுபடும் பலபொருளொருசொல்
ஒருபொருட்கே சிறந்த வினையானும் இனத்தானுஞ் சார்பானும் பொருள்தெரி
நிலைக்கட்பொதுமை நீங்கித் தெளியத் தோன்றும்.

(வ-று.) மாவென்பதொருசார் விலங்கிற்கும், மரத்திற்கும், வண்டிற்கும், பிறபொருட்கும்
பொது; மாப்பூத்தது, மாவுமருது மோங்கினவென வேறுபடுவினையானும் இனத்தானும்
மாமரமென்பது விளங்கிற்று. பிறவுமன்ன.

(வி-ரை.) இனம் என்பது, ஒரு பொருளுக்கும் பிறிதொரு பொருளுக்கும் உள்ள இயைபு
நோக்கி வரும்; சார்பு என்பது ஒரு பொருளுக்கும் பிறிதொரு பொருளுக்கும் எவ்வித
இயைபுமின்றி, சந்தர்ப்பத்தால் இயைபுடையதாகி வரும். (86)

வினை வேறுபடாப் பல பொருளொருசொல்

729. வினைவேறு படாஅப் பலபொரு ளொருமொழி
     ஆயுங் காலைக் கிளந்தாங் கியலும்.

(இ-ள்.) வினைவேறுபடாப் பலபொருள் ஒருசொல் ஆராயுங்காலைக் கிளந்து கூறப்படு
மென்க.