பொருளதிகாரம்223முத்துவீரியம்

விடியற் பொழுதிற்குரிய நிகழ்ச்சிகள்

799. விடியற் குரிய விலங்கு புள்ளினமுதல்
     மகிழ்தல் தாமரை மலர்தலு மாகும்.

என்பது, மிருகங்கள் பறவைகள் முதலியன மகிழ்தல் தாமரை மலர்தல்
விடியற்பொழுதிற்குரியன. (31)

நண்பகற் பொழுதிற்குரிய நிகழ்ச்சிகள்

800. கானல் நீரோடல் களிப்புறச் சக்கர
     வாகம் எருமை மாடுநீர்க் கிடத்தல்
     உச்சிக் குரியவாம் உணருங் காலே.

பேய்த்தேரோடல் சக்கரவாகமகிழ்தல் எருமைநீரிற் கிடத்தல்
நண்பகற்பொழுதிற்குரியன. (32)

கருப் பொருள்கள்

801. கருப் பொருள்,
     தெய்வஞ் செல்வர் சேர்குடி புள்விலங்
     கூர்நீர் பூமர முணாப்பறை யாழ்பண்
     தொழிலெனக் கருவீ ரெழுவகைத் தாகும்.

கருப்பொருள், தெய்வம் தலைவன் தலைவி குடி பறவை மிருகம் ஊர் பூ மரம் உணா
பறை யாழ் இசைப்பாட்டு தொழில் ஆகப் பதினான்கு வகைப்படும். (33)

குறிஞ்சிக்குரிய கருப்பொருள்கள்

802. வேற்கர முருகன் வெற்பன் சிலம்பன்
     குறத்தி கொடிச்சி குறவர் கானவர்
     குறத்தியர் கிளிமயில் கொல்சினக் களிறு
     அரிமாச் சிறுகுடி யருவி யகன்சுனை
     ஆரந் தேக்ககி லசோக மைவனம்
     உணாத்தொண்ட கந்தினை யோம்பல் குறிஞ்சியாழ்
     குறிஞ்சிக் கருப்பொரு ளாங்குறித் திடினே.

என்பது, குறிஞ்சித்திணைக் கருப்பொருள் தெய்வம் முருகன்; வெற்பன் சிலம்பன்
குறத்தி கொடிச்சி தலைவர்; குறவர் கானவர் குறத்தியர் குடி; கிளி, மயில் பறவை; யானை,
சிங்கம் விலங்கு;