பொருளதிகாரம்237முத்துவீரியம்

எட்டுத்திக்கையும் தன் திருக்கரங்களாக உடையவன். ஆள் ஊழுடையான் - ஆளும்
முறைமையுடையவன். யாழுடையார் மணம் - கந்தருவ மணம். (7)

8. இயற்கைப்புணர்ச்சி

836. கலவி யுரைத்தலு மிருவயி னொத்தலுங்
     கிளவி வேட்டலு நலம்புனைந் துரைத்தலும்
     பிரிவுணர்த் தல்லொடு பருவர லறிதலும்
     அருட்குண முரைத்தலு மணிமை கூறலும்
     ஆடிடத் துய்த்தலு மருமை யறிதலும்
     பாங்கியை யறிதலும் பகருங் காலை
     நீங்கா வியற்கை நெறியென மொழிப.

என்பது, கலவியுரைத்தல், இருவயினொத்தல், கிளவிவேட்டல், நலம்
புனைந்துரைத்தல், பிரிவுணர்த்தல், பருவரலறிதல், அருட்குணமுரைத்தல், இடமணித்தென்றல்,
ஆடிடத்துய்த்தல், அருமையறிதல், பாங்கியையறிதல், ஆகிய பதினொன்றும் இயற்கைப்
புணர்ச்சியாம்.

கலவியுரைத்தல்

என்பது, தெய்வப்புணர்ச்சி புணர்ந்த தலைமகன், புணர்ச்சி யின்பத்தினியல்பு
கூறாநிற்றல்.

(வ-று.)

சொற்பா லமுதிவள் யான்சுவை யென்னத் துணிந்திங்ஙனே
நற்பால் வினைத்தெய்வந் தந்தின்று நானிவ ளாம்பகுதிப்
பொற்பா ரறிவார் புலியூர்ப் புனிதன் பொதியில்வெற்பில்
கற்பா வியவரை வாய்க்கடி தோட்ட களவகத்தே. (திருக். 8)

(கு-ரை) கல்பாவியவரை - கற்கள் பரந்த மலை (பொதியமலை) கடிதோட்ட -
காவலினின்றும் நீங்கிய.

இருவயினொத்தல்

என்பது, புணராதமுன்னின்ற வேட்கையன்பு, புணர்ந்த பின்னும், அப்பெற்றியேநின்று, வளர்ந்துசேறலால், தலைமகளை மகிழ்ந்து கூறல்.