பொருளதிகாரம்259முத்துவீரியம்

கருத்தறிவித்தல்

என்பது, நீயிர் வாய் திறவாமைக்குக் காரணமுடையீர், அது கிடக்க, இத்தழை நும்
அல்குற்குத் தகுமாயின் அணிவீரெனத் தழைகாட்டி நின்று தன் கருத்தை யறிவியாநிற்றல்.

(வ-று.)

வின்னிற வாணுதல் வேனிறக் கண்மெல் லியலைமல்லல்
தன்னிற மொன்றி லிருத்திநின் றோன்றன தம்பலம்போல்
மின்னிற நுண்ணிடைப் பேரெழில் வெண்ணகைப் பைந்தொடியீர்
பொன்னிற அல்குலுக் காமோ மணிநிறப் பூந்தழையே. (திருக். 58)

(கு-ரை.) மல்லல் - வளமை. தன்நிறம் - தன்னுடைய திருமேனியில்.

இடைவினாதல்

என்பது, தழைகாட்டித் தன்கருத்து அறிவித்து, அது வழியாக நின்று, நும்மல்குலும்
முலையும் அதிபாரமா யிராநின்றன, இவையிவ்வாறு நிற்றற்குக் காரணம் யாதோவென்று
அவரிடை வினாவா நிற்றல்.

(வ-று.)

கலைக்கீ ழகலல்குற் பாரம தாரங்கண் ணார்ந்திலங்கு
முலைக்கீழ்ச் சிறிதின்றி நிற்றன்முற் றாதன் றிலங்கையர்கோன்
மலைக்கீழ் விழச்செற்ற சிற்றம் பலவர்வண் பூங்கயிலைச்
சிலைக்கீழ்க் கணையன்ன கண்ணீர் எதுநுங்கள் சிற்றிடையே. (திருக். 59) (11)

மதியுடம்படுத்தன் முற்றிற்று.

12. இருவருமுள்வழி யவன்வரவுணர்தல்

என்பது, தலைமகளும் தோழியுமுள்வழிச் சென்று, தலைமகன் கரந்த மொழியால் தன் கருத்தறிவிக்கத், தோழி யவனினைவறியா நிற்றல்.

அதன் வகை

840. ஐய மழிதலு மறிவு நாடலு
     மையறு தோழி யவன்வர வுணர்தல்.

(திருக்கோவையார் உரை)