பொருளதிகாரம்281முத்துவீரியம்

மறுத்திப்பொழுதிவள் இளையளென் றியையாமை கூறி மறுக்க வேண்டியதென்னை,
இனியிவ்வொழுக்க மிவளையொழிய ஒழுகக் கடவேனென வுட்கொண்டு நிற்ப, நீ யென்னை
மறைத்த காரியமினி நினக்கு முடியாதென, அவனோடு நகைத்துக் கூறல்.

(வ-று.)

பண்டா லியலும் இலைவளர் பாலகன் பார்கிழித்துத்
தொண்டா லியலுஞ் சுடர்க்கழ லோன்றொல்லைத் தில்லையின்வாய்
வண்டா லியலும் வளர்பூந் துறைவ மறைக்கினென்னைக்
கண்டா லியலுங் கடனில்லை கொல்லோ கருதியதே. (திருக். 105)

நகைகண்டு மகிழ்தல்

என்பது, இவடன்னை மறைத்தால் முடியாதென்றது மறையா தொழிந்தாவ்
முடியுமென்றாளாமெனத் தலைமக னுட்கொண்டு நின்று, உன்னுடைய சதுரப்பாட்டைச்
சேர்ந்த மெல்லென்ற நோக்கமன்றோ வெனக்குச் சிறந்ததுணை, அல்லது வேறுதுணை
யுண்டோவென, அவளுடைய நகைகண்டு மகிழாநிற்றல்.

(வ-று.)

மத்தகஞ் சேர்தனி நோக்கினன் வாக்கிறந் தூறமுதே
ஒத்தகஞ் சேர்ந்தென்னை யுய்யநின் றோன்றில்லை யொத்திலங்கு
முத்தகஞ் சேர்மென் னகைப்பெருந் தோளி முகமதியின்
வித்தகஞ் சேர்மெல்லெ னோக்கமன் றோவென் விழுத்துணையே. (திருக். 106)

அறியாள் போன்று நினைவு கேட்டல்

என்பது, தலைமகன் மகிழ்ச்சிகண்டு, இவன் வாடாமல் தழை 
வாங்குவேனென வுட்கொண்டு, என்னுடைய தோழியர் எண்ணிறந்தாருளர், அவருள்,
நின்னுடைய நினைவு யார் கண்ணதோ வெனத், தானறியாதாள் போன்று அவனினைவு
கேளாநிற்றல்.

(வ-று.)

விண்ணிறந் தார்நிலம் விண்டவர் என்றுமிக் காரிருவர்
கண்ணிறந் தார்தில்லை யம்பலத் தார்கழுக் குன்றினின்று
தண்ணறுந் தாதிவர் சந்தனச் சோலைப்பந் தாடுகின்றார்
எண்ணிறந் தாரவர் யார்கண்ண தோமன்ன நின்னருளே. (திருக். 107)